பக்கம்:பழைய கணக்கு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



வ. ரா. வாக்களித்த நூறு ரூபாய்

சென்னை ஒற்றைவாடை தியேட்டரில் திரு எஸ். வி. சகஸ்ரநாமம் ‘பைத்தியக்காரன்’ என்றொரு நாடகம் நடத்திக் கொண்டிருந்தார். விதவா விவாகம் பற்றிய நாடகம் என்பதால் அது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. அச்சமயம் என். எஸ். கிருஷ்ணன் சிறையில் இருந்ததால், நாடகக் கம்பெனியின் நிர்வாகப் பொறுப்பு முழுவதும் திரு சகஸ்ரநாமத்திடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது. சகஸ்ரநாமம், என். எஸ். கிருஷ்ணனை சிறையில் சந்தித்து, “இந்த நாடகத்துக்கு வ. ரா. அவர்களைத் தலைமை தாங்கச் சொல்லப் போகிறேன். அவருக்கு இம்மாதிரி சமுதாயப் புரட்சியான கருத்துக்களில் ஈடுபாடு அதிகம்” என்றார்.

“ரொம்ப சரி; வ. ரா.வைத் தலைமை தாங்கச் சொல்வது ரொம்பப் பொருத்தம்” என்றார் கிருஷ்ணன். பைத்தியக்காரன் நாடகம் நூறு நாட்கள் நடைபெற்றது. வ. ரா.வுக்கு அந்த நாடகம் ரொம்ப ரொம்பப் பிடித்து விட்டதால் ஏறக்குறைய அந்த நூறு நாட்களுமே நாடகத்துக்குத் தவறாமல் ஆஜராகிக் கொண்டிருந்தார். இதனால் வ.ரா.வுக்கும் என். எஸ். கே. நாடக சபைக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.

வ. ரா. ஒவ்வொரு நாளும் தியேட்டருக்கு முன் கூட்டியே போய் எல்லாவற்றையும் மேற்பார்வையிட்டு முடிந்ததும் முதல் வரிசையில் ஒரு மூலையாகப் போய் உட்கார்ந்து விடுவார்.

என்னையும் ஒரு நாள் நாடகத்தைப் பார்க்க வரும்படி அழைத்தார் வ. ரா. நான் அவரைக் காட்டிலும் வயதில் சிறியவன் என்பதால் “டேய்! இன்று மாலை ஒற்றைவாடை தியேட்டருக்கு வந்துருடா” என்று உரத்த குரலில் உரிமையுடன் பணித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/16&oldid=1145664" இலிருந்து மீள்விக்கப்பட்டது