பக்கம்:பழைய கணக்கு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41

மறுபடியும் ஜீப்பில் ஏறிச் சிறிது தூரம் சென்றதும் பணப்பையை அந்த ஜன்னல் பை வழியாகக் கீழே விட்டிருக்கிறார். அடுத்த வினாடியே அது ரோடில் விழுந்து விட்டிருக்கிறது.

“பை போய்விட்டது” என்று மணியன் அலறியதும் வண்டியை நிறுத்திச் சுற்று முற்றும் பார்த்தோம். பை அகப்பட வில்லை. பணம் போய்விட்ட கவலை ஒருபுறம். மைசூர் பார்க்க முடியவில்லையே என்ற துக்கம் இன்னெரு புறம்!

வேறு வழியின்றி ஜீப்பை கூடலூருக்கே திருப்பி ஒட்டச் சொன்னோம். எதிரில் வந்த ஒரு காரை நிறுத்தி, “எங்களது பை கண்ணில் பட்டதா?” என்று கேட்டோம்.

“ஆமாம்; கூடலூர் அருகில் ரோடு ஓரத்தில் ஒரு பை கிடப்பதைப் பார்த்தேன். ஆனால் அதை யாரோ அங்கே வைத்து விட்டுப் பக்கத்தில் எங்கோ இயற்கைக்குப் பதில் சொல்லப் போயிருக்கிறார் என்று எண்ணிக்கொண்டு வந்து விட்டேன்” என்றார் அந்தக் காரின் சொந்தக்காரர்.

கூடலூர் நெருங்கும் வரை வழியெங்கும் மெதுவாகத் தேடிக் கொண்டே போனோம். கிடைக்கவில்லை. கூடலூருக்கே திரும்பிச் சென்று அங்கே விகடன் ஏஜெண்டிடம் கொஞ்சம் பணம் வாங்கிக் கொண்டு அன்றிரவே ஊட்டிக்குப் போய்ச் சேர்ந்தோம். ‘தமிழ் நாட்டு எல்லையைத் தாண்டி ஜீப் எடுத்துச் செல்ல அதிகாரமில்லை; ஆனாலும் தருகிறேன்’ என்று அரை மனதோடு அனுமதித்த கலெக்டர் மனம் போலவே ஆகிவிட்டது.

“மணியன்! ரேஸுக்குப் போனால் பணத்தைத் தொலைத்து விடுவேன் என்று என்னிடமிருந்து பிடுங்கி வைத்துக் கொண்டீர்களே. இப்போது என்ன ஆச்சு?”என்று நான் அவரைக் கேட்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/42&oldid=1145984" இலிருந்து மீள்விக்கப்பட்டது