பக்கம்:பழைய கணக்கு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



குறுக்கே வந்த பூனை

மூட நம்பிக்கைகளை அறவே வெறுப்பவன் நான். ஆயினும் மற்றவர்கள் உணர்ச்சிக்கு மதிப்புக் கொடுத்து அவர்கள் மனம் நோகக் கூடாது என்பதற்காகச் சில விஷயங்களில் விட்டுக் கொடுப்பதும் உண்டு. இருந்தாலும் சகுனத்தில் எனக்குள்ள நம்பிக்கையை மட்டும் என்னால் அகற்ற முடியவில்லை. நமது வாழ்க்கையில் நேர்ந்து விடும் சிற்சில சம்பவங்கள் இப்படிப்பட்ட நம்பிக்கையில் அசையாத உறுதியை ஏற்படுத்தி விடுகின்றன.

நானும் என் மகன் பாச்சாவும் சில ஆண்டுகளுக்கு முன் லண்டன் ‘தமிழ்முரசு’ ஆசிரியர் திரு சதானந்தம் அவர்கள் வீட்டுக்கு வெகு அருகாமையிலுள்ள புகழ் பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் மைதானத்தையும் வேறு சில முக்கிய இடங்களையும் சுற்றிப் பார்த்து விட்டு பாரிஸுக்குப் புறப்பட்டுச் சென்றோம். பதினொரு மணிக்கு விமான நிலையத்துக்குப் புறப்படுவதாகத் திட்டம்,

“நான் என் காரிலேயே ‘ஹீத்ரு’ விமான நிலையத்தில் கொண்டு விட்டு விடுகிறேன். நீங்கள் புறப்படத் தயாராக இருங்கள்” என்று காலையில் எழுந்ததுமே கூறி விட்டார் திரு சதானந்தம்.

சரியாகப் பதினொரு மணிக்கு வீட்டை விட்டுப் புறப்பட்டு வெளியே காலடி எடுத்து வைத்தபோது என் முன்னே ஒரு பெரிய கறுப்புப் பூனை குறுக்கே ஓடியது. அதைக் கண்டதும் எனக்குச் ‘சுரீர்’ என்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/64&oldid=1146006" இலிருந்து மீள்விக்கப்பட்டது