பக்கம்:பழைய கணக்கு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

வருடங்களில் முடித்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தோடும் அவசரத்தோடும் செயல்படுவார். அவர் மாதிரி வேகமாகக் கார் ஒட்டக் கூடியவர்களை நான் பார்த்ததில்லை. டிராபிக் ஸிக்னல்களெல்லாம் அவருக்குப் பெரிய இடையூறுகள். ஏர்போர்ட்டில் எட்டு மணிக்கு விமானம் புறப்படுகிறது என்றால் முப்பது நிமிஷங்களுக்கு முன்னால்தான் ஆபீஸை விட்டுப் புறப்படுவார். டிராபிக் ஸிக்னல்கள் எதுவும் அவருக்கு லட்சியமில்லை. அதையெல்லாம் மீறிக்கொண்டு பயங்கர வேகத்தில் போய் ஏர்போர்ட்டை அடைந்து, அங்கே உள்ள டெலிபோன் பூத்தில் புகுந்து யாருக்காவது போன் போட்டுப் பேசிய பிறகே ஓடிச் சென்று விமானத்துக்குள் செல்வார்.

டெலிபோன் செய்வதற்குச் சோம்பலே கிடையாது. விடியற்காலம், பாதி ராத்திரி எந்த நேரத்திலும் யாருக்காவது டெலிபோன் செய்துகொண்டே இருப்பார். ஒரு சமயம் இரவு பன்னிரண்டு மணிக்கு எனக்கு போன் செய்து, “என்ன செய்கிறாய்?” என்று கேட்டார்.

“தூங்கிக் கொண்டிருந்தேன்” என்றேன்.

“இதற்குள்ளாகவா தூங்கிவிட்டாய்?” என்று அவர் கேட்ட போது சிரிப்பதைத் தவிர என்னால் எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை.

டெலிபோன் நம்பர்கள் அடங்கிய சின்ன டயரி ஒன்று எப்போதும் அவரிடம் இருக்கும். அவற்றில் பாதி நம்பர்களுக்கு மேல் அவருக்கு மனப்பாடம்.

வேலை, வேலை, எப்போதும் வேலைதான். மேஜை மீது நூறு கடிதங்கள் இருந்தாலும் பைல்கள் இருந்தாலும், அவ்வளவையும் ஒன்று விடாமல் படித்துப் பரபரவென்று அவ்வளவிலும் குறிப்புகள் எழுதிக் கையெழுத்துப் போட்டு விடுவார்.

பி. டி. ஜியைப் போன்ற இன்னொரு உழைப்பாளிச் சீமானை நான் கண்டதில்லை. இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற ஒரு மாபெரும் ஸ்தாபனத்தின் வளர்ச்சிக்குப் பல காரணங்கள் இருக்கலாம். அந்த நிறுவனத்தில் சக்தி மிக்க ரோட்டரி இயந்திரங்கள் இருக்கலாம். ஆனால் அந்த இயந்திரங்களை யெல்லாம் மீறிய சக்தி படைத்த இன்னொரு இயந்திரம் உண்டு. அதற்குப் பெயர்தான் பி. டி. கோயங்கா. அந்த மகத்தான மனித இயந்திரம் ஓய்ந்து விட்டது. ஆனாலும் பம்பாயிலுள்ள எஸ்பிரஸ் டவர் சிகரம் போல் பத்திரிகை உலகில் அவர் புகழ் ஓங்கி நிற்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/63&oldid=1146005" இலிருந்து மீள்விக்கப்பட்டது