பக்கம்:பழைய கணக்கு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

சென்று அந்த ‘டிரெடில்’ கதையைப் படித்துக் காட்டினேன். புன்சிரிப்போடு ரசித்துக் கேட்ட அவர், “நன்றாக இருக்கிறது. யார் இந்த எழுத்தாளர்? இவரை நமக்குக் கதை எழுதச் சொல்லலாமே?” என்றார்.

பின்னர் ஒரு நாள் எழுத்தாளர் கூட்டம் ஒன்றில் ஜெயகாந்தனை எனக்கு யாரோ அறிமுகப்படுத்தி வைத்தார்கள். அப்போது, “நீங்கள் ஏன் ஆனந்த விகடனுக்கு எழுதக் கூடாது?” என்று அவரிடம் கேட்டேன்.

“அவாள்ளாம் நம்ம கதையைப் போட மாட்டா” என்று வேண்டுமென்றே பிராம்மண பாஷையில், விகடனில் அந்தக் குறிப்பிட்ட இனத்தவரின் ஆதிக்கம் இருப்பதை எனக்கு உணர்த்துவது போல், தமக்கே உரிய பாணியில் குத்திக் காட்டினார்.

எனக்குக் கோபமோ, வருத்தமோ ஏற்படவில்லை, அவரை எப்படியாவது விகடனுக்கு எழுதச் செய்ய வேண்டும் என்பது தானே என் குறிக்கோள்?

“நான் விகடன் ஆசிரியரின் அனுமதியோடுதான் கேட்கிறேன். கதை எழுதிக் கொடுங்கள்” என்றேன்.

“சரி. பார்க்கலாம்” என்று சொல்லி விட்டுப் போனார்.

சில நாட்கள் கழித்து ஜெயகாந்தனிடமிருந்து ‘ஓவர்டைம்’ என்ற சிறுகதை விகடன் அலுவலகத்துக்கு வந்தது.

பாலசுப்ரமணியன் அந்தக் கதையைப் படித்துப் பார்க்க விரும்பினர்.

“வேண்டாம். அதை அப்படியே கம்போஸுக்கு அனுப்பி விடலாம். நாமே கேட்டு அவர் அனுப்பியிருக்கும் முதல் கதை இது. இதைப் பரிசீலனைக்கு உட்படுத்துவதோ, அல்லது பிரசுரத்துக்கு ஏற்றதல்ல என்று முடிவெடுப்பதோ அவரை ஊக்குவிப்பதாகாது. இது நாம் கேட்டு அவர் அனுப்பியுள்ள முதல் கதை. ஆகையால் பிரசுரித்து விடுவோம். இதற்குப் பிறகு வரும் கதைகள் சரியில்லையென்றால் திருப்பி அனுப்புவதில் தவறேதுமில்லை”என்று சொன்னேன் நான்.

புது எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில் இந்த முறையை எனக்குக் கற்றுத் தந்தவர் ஆசிரியர் கல்கி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/77&oldid=1146020" இலிருந்து மீள்விக்கப்பட்டது