பக்கம்:பவள மல்லிகை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

பவள மல்லிகை

அவள் பூப்பொறுக்கிக் கொண்டிருந்தவள் அப்படியே நின்றுவிட்டாள். அந்தக் குழந்தை மனசில் என்னவெல்லாம் கற்பனை செய்துகொண்டாளோ!

“என்ன, சும்மா நிற்கிறாயே! இந்த மரம் உங்கள் வீட்டில் பூவைக் கொண்டுபோய்ச் சொரியாது. இது பட்டணத்து மரம். பொறுக்கிக் கொண்டுதான் போக வேண்டும்" என்று அவளே இந்த உலகத்துக்கு இழுத்து வந்தேன். அவள் உடனே என் பரிகாசப் பேச்சுக்கு ஏற்றபடி,"ஆமாம், பட்டணத்தில் குடியிருக்கிறவர்கள், தாங்கள் வேறாெருவர் வீட்டில் குடியிருக்கும் ஞாபகமே இல்லாமல் வீட்டைச் சொந்த வீடாகவே எண்ணிக் கொள்வார்கள்' என்று தானும் வேடிக்கையாகப் பேசினாள்.

உடனே எனக்கு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வந்தது. "அம்புஜம், இந்த வீட்டுக்காரரும் அவருடைய சம்சாரமும் வடக்கேயிருந்து இந்த ஊருக்கே வருகிறார்களாம். அவர் 'ரிடையரா'கி வருகிறார். இதுவரையில் இந்த வீடு முழுவதும் எங்களுடைய சுவாதீனத்தில் இருந்தது. எல்லா இடங்களிலும் பழகினோம். இனிமேல் அவர்கள் இஷ்டப்படி நடக்க வேண்டும். எங்கள் இடத்தோடு நாங்கள் நின்று விடவேண்டும்" என்றேன்.

"ஏன், அவர்களுக்கு இடம் போதாதா? குழந்தை குட்டிகள் அதிகமோ?" என்று கேட்டாள் அம்புஜம்.

"குழந்தையும் இல்லை; குட்டியும் இல்லை. ஊராருக்கு உபகாரம் பண்ண அவர்களுக்கு மனசே வராதென்று எங்கள் அகத்து மாமா சொல்கிறார். இவர் பாங்கியிலேதான் ஊர்ப்பட்ட பணம் சேர்த்து வைத்திருக்கிறாராம், அந்த மனிதர்."

"எப்படி இருந்தாலும் உங்கள் குணத்துக்கு எல்லோரும் சிநேகமாகிவிடுவார்கள்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/10&oldid=1406368" இலிருந்து மீள்விக்கப்பட்டது