பக்கம்:பவள மல்லிகை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பவள மல்லிகை

3

உதிரும், பெரிய புட்டிக் கூடை நிறையப் பொறுக்கிச் சேர்ப்பாள். கூட யாராவது வருவார்கள். ஆனால் அப்படி வருகிற குழந்தைகளுக்கு அவளைப்போல அத்தனை பொறுமை இராது. சில நாள் ஒருவருமே வரமாட்டார்கள். அவள் தனியேதான் பொறுக்குவாள். தான் இவருக்குச் சுச்ருஷை செய்து அனுப்பிவிட்டு மரத்தடிக்குப் போனால் அநேகமாக எல்லாப் பூவையும் பொறுக்கியிருப்பாள். கொஞ்ச நஞ்சம் விட்டுவிட்டுப் போக அவளுக்கு மனசே வராது. நானும் ஏதோ பேருக்குப் பொறுக்கி அவள் கூடையில் போடுவேன்.

"கல்யாணி மாமி, நேற்றைக்கு என்ன கதை தெரியுமோ? கண்ணன் சத்தியபாமைக்காகப் பாரிஜாத மரம் கொண்டுவந்து நட்டானாம். அது என்ன ஆச்சுத் தெரியுமா? மரம் சத்தியபாமை வீட்டில்; பூவெல்லாம் ருக்மிணி வீட்டில் கண்ணன் திருட்டுத்தனம் பார்த்தீர்களா?” என்று ஒரு நாள் பூப்பொறுக்கிக்கொண்டே அவள் சொன்னாள்.

"அந்தக் கதை என்ன? இப்போதுதான் பாரேன். இந்தப் பாரிஜாத மரம் எங்கள் வீட்டில் இருக்கிறது. நான் ஜலம் விட்டுக் காப்பாற்றுகிறேன். ஆனால் பூவெல்லாம் உங்கள் வீட்டுக்குப் போய்விடுகிறது" என்று சிரித்துக் கொண்டே நான் சொன்னேன்.

"போங்கள், மாமி! நான் உங்களை எடுத்துக்கொள்ள வேண்டாமென்று சொன்னேன்? நீங்கள் உத்தரவு தந்ததனால்தானே நான் இங்கே வந்து பொறுக்குகிறேன்?"

"ஆமாம். அந்தக் கதையில் அடுத்த வீட்டுக்காரிக்கு உபயோகப்பட்டது பூ. இங்கே நாலு தெருத் தாண்டிப் போகிறது பூ. அந்த ருக்மிணியைக் காட்டிலும் இந்த அம்புஜத்தினிடம் கண்ணனுக்குப் பிரியம் அதிகம்!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/9&oldid=1406367" இலிருந்து மீள்விக்கப்பட்டது