உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பவழபஸ்பம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

பவழ

பத்துப் போர் வீரர்களை நீர் பணி புரிய அமர்த்திக் கொள்ளலாம் என்றும் ஓர் உத்தரவு பிறப்பிக்கிறேன்" என்று மன்னன் கூறினான். நவகோடியாருக்கு, காவலனின் கருணையின் காரணம் புலப்படவில்லை. அரசனுடைய அன்பு, சில சமயங்களிலே ஆபத்தின் முன் அறிவிப்பு என்பது மட்டும் தெரியும் வணிகருக்கு. எனவே, யோசிக்கலானார்!

"நவ கோடியாரே! உம்மிடம் ஒரு இரகசியம் கூற விரும்புகிறேன். ஆண்டவன் விதித்த முறைப்படி, அரசனும் ஆண்டியும் அனைவரும் தத்தமக்கு ஓர் நிலை எனப் பெற்று உள்ளனர். இந்தத் தத்துவம் தவறானது என்று பேசுவது, பாபச் செயல். ஏழை எளியோருக்கு உபகாரம் செய்யத்தான் வேண்டும். தயாபரன், தனம் தருவதே அதற்காகத்தானே! ஏழைகள் தங்குமிடம், சாப்பாட்டு விடுதி, சாவடி, இவைகள் அமைக்க வேண்டும். ஆனால் ஏழையைப் படைத்தவன் இறைவனாக மாட்டான் என்று பேசுவதா? ஏழையின் நிலைமைக்குக் காரணம், அவனுடைய "விதி" அல்ல, பிரபுக்களின் சூழ்ச்சி என்று பேசுவதா? இதுபோன்ற பாப மொழி பேசுவோர் படுபாதாளத்திலே வீழ்வது மட்டுமல்ல, மக்களையுமன்றோ மீளா நரகு புக வைப்பர்" என்று கூறினான். மன்னன், நவ கோடியார், "அரசே! அதற்கென்ன சந்தேகம்" என்றார். அவருடைய வழக்கமான பாடம் அது. "இத்தகாத செயல் புரிவோரைத் தண்டிக்க நெடுநேரம் பிடிக்காது" என்றான் மன்னன். "ஒரு வார்த்தை சொன்னால் போதாதோ, உளறி உலகைக் கெடுக்கும் அந்தக் கும்பலைக் தூக்கு மேடைக்கே இழுத்துச் சென்று விட மாட்டார்களோ, படையினர்" என்று, வீராவேசத்தோடு வணிகர் பேசினார். "உண்மை! ஆனால், அங்ஙனம் நான் உத்தரவு பிறப்பித்தால் உமது உத்தம மனைவியார், மருதவல்லி அம்மையாருமன்றோ சாகவேண்டும்!"—மன்னன், கடைசியில் அம்பை எய்தான். அடி வீழ்ந்து எழுந்தார் வணிகர், கெஞ்சினார்; மன்னன் பிறகு மக்கள் மன்றத்திலே மருதவல்லி பேசுவது பற்றிக் கூறி, உடனே, மருதவல்லியைக் கண்டித்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவழபஸ்பம்.pdf/13&oldid=1638498" இலிருந்து மீள்விக்கப்பட்டது