உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பவழபஸ்பம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பஸ்பம்

13

மன்றத்துடன் கொண்டுள்ள தொடர்பை அறுத்துக் கொள்ளச் செய்ய வேண்டும் என்று எச்சரித்தான். நவ கோடியார், அதன் பிறகே, மருதவல்லியைக் கண்டித்தார்.

மருதவல்லி, பணம் தேடித் தேடி பண்பை இழந்து விட்ட, தன் கணவனிடம் வாதாடி, அவரைத் திருத்துவது முடியாத காரியம் என்பதை உணர்ந்தாள். கணவனுடைய கருத்திலே நெளிந்து கொண்டிருந்த சுய நலத்தையும் பேராசையையும் சாகடிக்கத் தக்க திறமை தனக்கு இல்லை என்பதையும் உணர்ந்தாள். இவற்றை விட அதிகத் தெளிவாக வேறொன்றையும் மருதவல்லி உணர முடிந்தது. கணவன் மனம் கோணாமல் நடந்து கொள்வோம். நாட்டிலே உள்ள காட்டு முறையைக் போக்க நாம் தானா இருக்கிறோம். மற்றவர்கள் அக்காரியத்தைக் கவனித்துக் கொள்ளட்டும். 'நாம்' 'குடும்ப விளக்காக' இருந்து விடுவோம், என்ற எண்ணத்தைத் தன்னால் கொள்ளமுடியவில்லை என்பதை உணர்ந்தாள். வாழ்வுக்காகக் கொள்கையை மறந்து விட முடியாத அளவுக்கு, மருதவல்லியின் மனம் உரம் பெற்று விட்டது. எனவே, இனிக் கொள்கைக்காகப் பணிபுரிவது, அதற்காக, 'விடுதலை' பெறுவது என்ற துணிவும் பிறந்து விட்டது.

அந்த அழகிய முகத் தோற்றத்தையும், அன்பு வழியும் விழிகளையும் கண்டு, நவகோடியார், பரவசமடைந்த காலம் ஒன்று உண்டு, அது பேழைகளிலே, முத்து, பவழம், வைடூரியம் நிரம்பாததற்கு முன்பு!

அரண்மனையிலே செல்வாக்குப் பெற்றுள்ள நிலையில் இருக்கிறோம்—இந்த மருதம் அரசிளங்குமரிகளுடன் அளவளாவி அகமகிழ்வதை விட்டு, அறமாம், நெறியாம், அன்பாம், அருளாம், சங்கமாம் சன்மார்க்கமாம், இவ்விதமான கவையற்றவைகளைக் கட்டி அழுகிறாளே என்று கவலைப்பட்டார் முதலில். மன்னன் மிரட்டிய பிறகோ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவழபஸ்பம்.pdf/14&oldid=1638499" இலிருந்து மீள்விக்கப்பட்டது