உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பவழபஸ்பம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

பவழ

தந்தையின் காலைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு, மருதம் "அப்பா! இனித் தாங்கள் வீடு செல்லலாம் நான் போக வேண்டிய இடம் இதோ" என்று கூறி, புத்த மார்க்க போதனைக்காக அமைத்திருந்த மடாலயம் ஒன்றைக் காட்டினாள். ஒரு கணம் திகைத்துப் பேனார் கவிராயர்—எனினும் மாற்ற முடியாத முடிவு அது என்பதையும், மக்களின் கேலியும் எதிர்ப்பும்கூட மகளைத் தீண்டமுடியாத நிலையை தரத்தக்க திருஅகம் அந்த இடம் என்பதையும் உணர்ந்தார். "மகளே! தடை கூற நான் யார்? தள்ளாத பருவம் எனக்கு, உன் துணை கிடைக்கும் என்று எண்ணினேன், தூய ஒளி உன்னை அழைக்கிறது. குழந்தாய்! சென்று சேவை செய்! நான் என் கடைசி மூச்சு இருக்கும் வரையில் அறிவுப் பணிபுரிந்தே வருவேன்" என்று கூறினார். மருதவல்லி மடாலயம் சேர்ந்தாள், கவிராயர் கிராமம் சென்றார், வெண்ணிலா நவகோடியார் மாளிகை புகுந்தாள்!

மக்கள் மன்றம் மகிழ்ந்தது. மருதவல்லியின் 'தியாகம்' மன்றத்தின் பெருமையை மண்டிலம் அறியச் செய்தது. கொள்கைக்காக வாழ்வின் சுவையை இழக்கும் பண்பு வளரும், புத்தமார்க்கம் வெல்லும் என்ற நம்பிக்கை பலப்பட்டது. மன்னன் மார்த்தாண்டனுக்கு அடக்க முடியாத கோபம். இனித் தாக்கித் தீருவது என்ற முடிவுக்கு வந்தான்—தாக்கீதுகள் கிளம்பின, புத்த மடாலயங்களைக் கலைத்து விடும்படியும், சதிகாரர்களைச் சிறைப்படுத்தும் படியும். மருதவல்லி தங்கியிருந்தது, புத்தமடாலயம் கூட அல்ல, புத்த மார்க்கம், அளித்த நன்னெறியின் மாண்புகளை மக்களிடம் எடுத்துரைத்து, மாசுதுடைக்கும் பிரசாரம் புரியும் அமைப்புத்தான் எனினும், அந்த மடாலயத்துக்கும் மக்கள் மன்றத்துக்கும் இருந்த தொடர்பைக் காரணமாகக் காட்டி, புதிய மார்க்கப் போதனை என்ற திரைமறைவில் வெளிநாட்டு வேந்தனை வரவழைத்து அரநாட்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவழபஸ்பம்.pdf/17&oldid=1638502" இலிருந்து மீள்விக்கப்பட்டது