100
தாய்க்கிழவி, கன்னி சிறுவர் சிறுமியர்கள்
வாய்கிழியப் பாடும் மறுமலர்ச்சிச்-சேய்க்கவிதை,
புத்தம் புதுமைக் கவிதை புதுப் போக்கில்
நித்தம் புனைந்திங்கே நீட்டினார்!-கொத்து
மலரும் புதுமை; மதுவும் புதுமை;
அலரும் பொருள் புதுமை! ஆன்ற பலரும்
எளிதிற் புரியும் இசைப்பாடல், சிந்து,
கிளிக்கண்ணி, கும்மி, கிளரும்-வளத்தில்
மிகுகவிதை வெண்பா, விருத்தம் பலவும்
வகைவகையாய்ப் பாரதியார் பாடி,- அகமும்
புறமும் புரியா திருந்தோர்க்கும் ஆன்ற
திறமை மருந்தாம் திருவாம்-மறத்தோள்
வரிப்புலியை, நாட்டின் மடமை அடிமைக்(கு)
எரிப்புலியைப் பாரதியார் ஏவ,-வரிக்குவரி
தேன் சொட்டுந் தீங்கவிதை ஏடெழுதி மங்காத
வான் முட்டும் நீள்புகழை மாத்தமிழ்த்தாய்-கூன் முட்டும்
பிள்ளைமதி நெற்றிப் பெருமுடிக்கு மாமகுடம்
அள்ளும் அழகு தரச் சூட்டினார்!-தெள்ளு
புதிய நடை, பாரதியின் பொற்கவிதை சிந்தும்
புதிய நடை சங்கப் பொலிவே - புதுமைப்பெண்
வீசி நடக்கும் போர் வீரர் பெரு நடையே!
பேகம் மயிலும் பிடிகளிறும்-கூசப்
பயிலும் நடையெல்லாம் பாடலிலே காண்போம்!
வயலுழவன் ஏர்ப்பாட்டை வாய்க்கால்-அயலிருந்து
பாடச் சுவைக்குஞ் செவிபோலப் பாரதியின்
பாடல் செவிக்கின்பம் பாய்ச்சாதோ?-பீடு
நடைமுரசும் நல்காதோ? சங்கு முழக்கம்
தொடை முறுக்கை ஏற்றாதோ? சொல்வீர்!- படைப்புப்