உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

கூடுகட்டி வாழ்கின்ற புள்ளினமும் ஓட்டிக்
       குடியோம்பி உயிரோம்பி உடலோம்பி நாட்டில்
வீடுகட்டி வாழுகின்ற மற்றோரும் வாழ
       விளைவாக்கம் தந்தவனே நல்லுழவன் ஆமே!

கார்தேக்கிக் கற்பிளந்து வரப்புயரக் கட்டிக்
       கடுங்கோடைக் குளிர்காற்றில் கால்கடுக்க நின்றே
ஏர்தேக்கி உழுதிடுவோன் இல்லையெனில் கூரை
       இருப்புண்டோ? இலையுண்டோ? இலைக்குச்சோ றுண்டோ?
சீர்தேக்கி நிற்கின்ற சிற்றூரும், சிற்றூர்த்
       தெருநோக்கி நிற்கின்ற குடிசைகளும் உண்டோ?
தேர்தேக்கி நிற்கின்ற குளங்கோயில் உண்டோ?
       திருநாட்கள் மணியோசை சிவபூசை உண்டோ?

ஏர்ப்படையாற் பன்னிரு நாள் உழுதுழுது கீறி
       எருவிட்டு மடக்கோட்டி இராமுழுதுந் தங்கிக்
கார்ப்படையை வயல்தேக்கி நீள்கரம்யை மாற்றிக்
       கட்டியிட்டு மேடுபள்ளம் தட்டியிட்டு நல்ல
சீர்ப்படையாஞ் சம்பாநெல் முடிபறித்து நட்டுச்
       செழுவளத்தைச் சேர்க்கின்ற நல்லுழவன் நாட்டுப்
போர்ப்படையுள் ஏர்ப்படையாய்ப்புகுந்திருக்கக்கண்டோம்!
       பொதுவாழ்வில் உழவனிலாப் புகுவாயில் உண்டோ?

மாட்டுக்கிங் குணவளிப்போன் உழவனாவான்; வாழும்
       மக்கட்கிங் குணவளிப்போன் உழவனாவான்; கொல்லர்
வீட்டிற்கிங் குணவளிப்போன் உழவனாவான்; வேறு
       வேலையிலா வீணர்க்கும், செவிகுளிரும் நல்ல
பாட்டிசைக்குங் கவிஞருக்கும் கலைஞருக்கும், கவ்வி
       பயிற்றுகின்ற கணக்காய மக்கட்கும், வாழும்
நாட்டிற்கும் உணவளிக்கும் நல்லுழவன் வள்ளல்!

       நலிந்தாலும் கொடுப்பதன்றிக்கொள்வதையே எண்ணான்!