உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

கன்னித் தமிழ்த்தாயே கற்றோர்க்குத் தாயானாள்!
என்னென்பேன், ஆளனிலா இக்கன்னித் தாய்மையினை!
சங்க இலக்கியத்தைச் சார்ந்தால் இது புரியும்!
இங்குள்ள தாய்மாரே! என்மேற் சினவாதீர்!
பேரில்லாப் பிள்ளை பல பெற்றளித்து வந்துள்ளாள்!
ஊரார் சிரிப்பார்கள்! உண்மை; மிகஉண்மை!
குப்பையைச் சீய்த்தகொண்டைக் கோழியைப் பாடினவன்
குப்பைநற் கோழிஎனக் கூறப் படுகின்றான்!
வெய்யில் எழவெழவே வெந்துருகும் வெண்ணெய்யைக்
கையில்லா ஊமனும் கண்ணாலே காப்பதுவோ?
கையிலூமன் நற்கவிஞன் கண்ட பெயரிதுவாம்!
ஐயகோ பேரில்லா மக்கள் பலருண்டே!
பிள்ளைகளில் வேற்றுமையைப் பேணாப் பெருஞ்சிறப்பை
உள்ளத்திற் கொண்டவள் நம் ஒப்பில் தமிழ்த்தாயே!
பெண்பிள்ளை பல்லோரைப் பெற்றே அளித்துள்ளாள்;
கண்ணில்லாப் பிள்ளையெலாம் கட்டி வளர்த்துள்ளாள்!
பார்ப்பான், அரசன், பலசரக்கு விற்றிருப்போன்,
ஊருக் குழைத்த உலுத்தன் எனப்பாரா(து)
எல்லோரும் நல்லோரே என்றெண்ணித் தென்னாட்டில்
வல்லோரைப் பெற்றெடுத்தாள் எம்மன்னை! வாழியவே!
வள்ளுவனைப் பெற்றெடுத்தாள் மங்காத தமிழ்த்தாயே!
பிள்ளை மதியுடையார் பின் வந்தோர் கூசாது
பொய்யைப் புளுகைப் புகுத்தித் தமிழர் தம்
மெய்யைச் சுடுகின்றார், வேதனையில் வேதனையே!
ஆதியென்ற கீழ்ச்சாதி அம்மைக்கும், பொய்யையே
ஓதிப் பிழைக்கின்ற பார்ப்பான் ஒருவனுக்கும்
முப்பாலைத் தந்த முனிவன் பிறந்தானென்(று)
இப்பால் கதைக்கின்றார்! ஈனத் தொழிலிது காண்!