#34 நீர்க்குடத்தைத் தாங்கா நிலைகுலையும் உன்னிடையைச் சீர்செய்வ தாய்ச்சொல்லிச் சிற்றிடையை நானனைத்தேன்! அம்மம்மா! நீசிரித்த அந்தச் சிரிப்பொலியை எம்மால் மறந்திருக்க எந்நாளும் ஆகா! வருவாய்!” எனவழைத்தேன்; உன்வருவாய் என்ன தருவாய்? எனக்கேட்டாய்; என்வருவாய் உன்றன் செவ்வாய்ச் சிரிப்(பு) என்றேன்; சீறிச் சிலைத்துமே, 'அவ்வாயும் இவ்வாயும் செவ்வாய் புதனும்போல் சேர்ந்திருக்க வேண்டும்!” என்றாய்! செப்பக்கேள்: அந்நிகழ்ச்சி யார்மறுக்கக் கூடும்? அது தானே அன்பின் - வழிய துயிர்நிலை என்றே வகுத்திங்(கு) அழியாப் புகழை அளித்தார் நம் வள்ளுவனார்! வற்றி வறண்ட மறிகடலும், பூக்கள்மேல் சுற்றித் திரியும் சுரிவண்டும், வானில் நிலவும் நிலவும், நிறைகதிர் வீச்சும் உலவும் உலகம் உருண்டோடிக் கொண்டிருக்கச் செய்யும் செயலெல்லாம், செந்தமிழே! நல்லன்பால் வையம் வழங்கும் வழியென்றே வள்ளுவனார், ‘அன்பின் வழிய துயிர்நிலை; அஃதிலார்க்(கு) என்புதோல் போர்த்த உடம்(பு) என்றார்! என்றும் இணைந்திருக்க அன்பே இனித்திருக்க அன்பே துணையிருக்கும் என்றே துணி! முடிவுரை (நாற்சீர் இரட்டைச் சிந்து) நீளலைகள் வந்துவந்து நெடுங்கரையைத் தாவும்! நீண்டிருக்கும் மரமடர்ந்த நெஞ்சையள்ளும் காவும்! வாள்விழியை ஒத்திருக்கும் மணற்கழுநீர்ப் பூவும்! மாப்புதுவைச் சீர்பாடி வரிக்குயில்கள் கூவும்!
பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/135
Appearance