4. ஒருமைப்பாடு
(நேரிசை ஆசிரியப்பா)
வானைத் தாவும் மலையின் இடையில்
தேனடை பொத்த தீந்தமிழ் வெய்யோன்
கடல்சூழ் உலகக் காரிருள் போக்கும்
இயல்பிற் றாகும் என்ப துணர்ந்தே
பொற்கதிர் புதுக்கதிர் தைக்கதிர் கண்டு
பொங்கல் வாழ்த்திப் பொங்கலை நிறைய
உண்டு களிக்கும் ஊரார்க் கின்று
தென்னகத் திருச்சி வானொலி யாளர்
கழையின் சாறாம் கவியரங்கத்தை
வழங்கினர்; அவர்க்கென் வணக்கம்! வணக்கமே!
தலைமை தாங்கும் தமிழர் பெருமகன்
இலைமறை காயென ஈத்தேன் அடையென
இன்று நிலவும் எம்மருந் தமிழைக்
கூன்மலை தொங்கும் தேனிறால் சிதைத்துப்
பிள்ளைக் கூட்டும் பிடியைப் போல
மக்கள் துய்க்க வழங்கும் வள்ளல்
பண்டையர் வழிவரு தொண்டைமான்; அவர்க்கு
வாயார்ந் துரைப்பன் வணக்கம் பலவே!
தென்னகப் பெரியீர்! தீந்தமிழ்ச் சான்றீர்!
கவித்தேன் மாந்தக் கவியரங் கெழுந்து
வந்ததை வாழ்த்தி, வந்ததை வாழ்த்திப்
பணிவன் போடு பகர்வன் வணக்கம்!
இருவே றுலகத் தியற்கையைக் குறளும்