29. விதையும் விளைச்சலும்
(எண்சீர் விருத்தம்)
தொடுவானில் முளைக்கின்றான் இளம்பரிதி நீண்ட
தொலைவிருக்கும் செங்குன்ற நீளருவி போல
நடுவானில் கலைகின்ற மணற்குவித்த வானை
நாடிவரும் பாடிவரும் அதிகாலைப் புட்கள்
நெடுவானில் பொன் தூறல்! நீலவானின் ஆடை
நிறம்மாற நிறம்மாறும் அதிகாலை நேரம்
இடுவானில் நல்விளைச்சல் எனச்சொன்னாள் இல்லாள்
இத்திங்கள் தைத்திங்கள் ஊர்வாழ்த்தக் கேட்டேன்.
வித்தின்றேல் விளைவுண்டோ எனவென்னைக் கேட்டாள்
வீண்வம்புக் காரியிவள் எனவெண்ணிக் கொண்டு
சத்தின்றேல் சதையுண்டோ? சதைத்துடிப்பும் உண்டோ?
சச்சரவு குடும்பத்தில் முளைத்திடுதல் உண்டோ?
பத்திரண்டு பிள்ளைகளும் பஞ்சமும்தான் உண்டோ?
பாராளும் அரசுக்கும் தொல்லைகளும் உண்டோ?
வித்திருந்தால் போதாது வேறுபல வேண்டும்
விரிவாகச் சொல்லுகிறேன் கேளென்று சொன்னேன்.
சேலாட்டுக் காரியாய்த் சிலகாலம் வாழ்ந்தாய்
சிரிப்பூட்டுக் காரியாய் சிலகாலம் வாழ்ந்தாய்
தாலாட்டு காரியாய் நீ மாறிவிட்டாய்; இன்றே
தலையாட்டம் கையாட்டம் உடலாட்டம் கண்டு
கோலாட்டக் காரன்னாய் மாறிவிட்டேன் நானும்
குறிக்கோளை இதுவரையில் நாம்மறந்து போனோம்
வாலாட்டு பகைவறுமை நொறுக்குதற்கே எங்கும்
வளர்தொழிலும் நல்விதையும் விளைச்சலுமே தேவை,