5. அண்ணாமலைப்
பல்கலைக் கழகம்
(எண்சீர் விருத்தம்)
உலகத்தில் இயற்கையினை அடக்கி மக்கள்
உறுதுணைக்கே பயன்படுத்தும் ஆன்ற செய்கை
பலகலைமா மன்றங்கள் விளைக்கும் ஆற்றல்
பகுத்தறிவாம்! அவ்வறிவை நல்கும் அண்ணா
மலையரசர் பல்கலைமா மன்றம் வாழும்
மாப்புகழ்சேர் துணைவேந்தே!1 புலமை மிக்கீர்!
விலையில்லாக் கவிதைவிருந் தேற்க வந்த
மேலோரே! உளங்கனிந்த வணக்கம் ஏற்பீர்!
1
தேன்கலந்த செஞ்சொல்லால் தமிழர் நாட்டைச்
சீர்படுத்தும் எதிர்காலக் கவிஞர், என்றன்
ஊன்கலந்த உயிர்கலந்த தமிழாற் பாடி
உளங்கவரப் போகின்ற கவிய ரங்கில்,
நான்கலந்து கொள்ளுகின்ற வாய்ப் பளித்த
நல்லோரே! முதுபுலவீர்! ஊர்வாழ் மக்காள்!
வான்கலந்த மின்னிடையீர்! இங்குச் சூழ்ந்த
மாணவர்காள்! யாவர்க்கும் வணக்கம்! நன்றி!
2
காராடும் நீள்வானம் பொய்த்த போதும்
காத்தளிக்கும் நற்றாயாம் வற்றாப் பொன்னி
நீராடும் தமிழ்நாட்டில் பிறந்த அண்ணா
மலையரசர் மலையரசர் நினைவால் கல்விச்,
சீராடும் பல்கலைசேரி கழகம் கண்டார்;
செந்தமிழ்போல் நீள்புகழைக் கண்டார்! அன்னார்
பேராடும் பல்கலைமா மன்றம் நாட்டில்
பெறற்கரிய பெரும்பேறே! வாழ்க! வாழ்க!
3