உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41


மண்ணுழுது பிளப்பதற்கே இயந்தி ரங்கள்,
     மலையுடைத்து நீர்பாய்ச்ச இயந்தி ரங்கள்,
கண்ணுக்குத் தெரியாத செந்நெல் நோயைக்
     காப்பதற்கு நன்மருந்து யாவும் தந்தே
உண்ணுதற்கே உணவளிக்கும் உழவர் வாழ்வை
     உயர்த்துவதே குடியரசின் உயர்ந்த நோக்கம்!
மண்ணுழுவோம்; வினைவடைவோம்! இஃதே இந்த
     மாநிலத்தில் நாமடையும் இன்ப வாழ்வாம்! 11

(முச்சீர் இரட்டை)



உழத்தி :
கருக்கலிலே எழுந்துவந்த மச்சானே!—நம்ப
கழனியெலாம் உழுதாச்சா மச்சானே?

உழவன் :
கருக்கலிலே எழுந்துவந்தேன் பொன்னாத்தா!—நம்ப
கழனியிலே தண்ணியில்லே பொன்னாத்தா! 12

உழத்தி :
இரவெல்லாம் தூங்கிவிட்ட மச்சானே!—கழனியிலே
எப்படித்தான் தண்ணிபாயும் மச்சானே?

உழவன் :
இரவெல்லாம் கண்விழிச்சி வைச்சேண்டி—தண்ணி
எங்கெங்கோ பாய்ஞ்சிடிச்சு! தப்போடி? 13

உழத்தி :
கஞ்சிவந்து குடிச்சுவிட்டு மச்சானே!—நீ
காரியத்தைப் போய்ப்பாரு மச்சானே!

உழவன் :
கஞ்சிவேண்டாம்; காம்பு கொடு பொன்னாத்தா!—நான்
களைக்கமாட்டேன்; சளைக்கமாட்டேன் பொன்னாத்தா! 14