உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45

ஏர்பிடித்து நிலமுழுது நன்னீர் பாய்ச்சி
      இயல்பான உரமிட்டு வரப்புக் காத்துக்
கூருடையா விதை நட்டுக் களையை நீக்கிக்
      கூன்கதிர்கள் விளைந்தவயல் அறுத்தெடுத்துப்
போர்குவித்த நல்லுழவர் வாழு கின்ற
      பொன்னாடாய் நம்நாட்டைச் செய்வோம்! நம்மை
ஆரெதிர்ப்பார் உலகத்தில்? பகைப்பார் ஆனால்
      அழிவன்றி வேறென்ன அடைவார் தாமே? 26

குடியரசு நாட்டினிலே மக்கள் ஈன்ற
      குலமொன்றே; தொழிலொன்றே; குடிமை ஒன்றே!
நெடுநேரம் அவரவர்கள் ஆற்றல் காண
      நீளுழைப்பைத் தந்திடுவோம்; ஓய்வில் தத்தம்
குடியிருப்புத் தோட்டத்தில், தோட்டம் சார்ந்த
      குறுநிலத்தில் பயிர்விளைப்போம்!வெட்கம் வேண்டாம்!
விடுபடுவோம்; பசிவறுமை வேர றுப்போம்;
      வெளிப்பகையை முறியடிப்போம்; வாழு வோமே! 27

நானுழவன் என்பதிலே மகிழ்ச்சி கொள்வேன்!
      நாடாளும் அமைச்சுக்கும், அறிஞர் கட்கும்,
மானுழுத தோலிருந்தே பரத்தைத் தேடி
      வழிபார்க்கும் முனிவர்க்கும், இல்லத் தோர்க்கும்,
தேனுழுத சொற்குழவி, என்னைப் போலச்
      செந்தமிழில் கவிபாடும் வறிய வர்க்கும்,
கூன் குருடு உண்பதற்கும் கொடுப்ப தாலே
      குடியரசுத் தலைவன் நான்! அரங்கன் ஆமே! 28

நாள்: 25—1—1966

இடம்: புதுவை வேதபுரீசுவரர் நூல் நிலையம்.