பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73

கைகால் விழியால் கருத்தை விளக்கத்தன்
மெய்படு பாட்டை விளக்கினான்; அஃதே
இயலிசை கூத்தென என்றும் இனிக்கப்
பெயல்பொழி வானாய்ப் பிறர்க்குவந் தீந்தான்!2
கலையிலா வாழ்க்கை கலைகலா வாழ்க்கை!
கலைப்பயன் இன்பக் கலையின் பெருக்காம்!
கிடைத்ததை உண்டே கிடப்பது வாழ்வின்
மடத்தனம் என்றே மனத்தில் நினைத்தான்;
மனையறங் கண்டான்; மனைக்குறு மாட்சித்
தனிமகள் கண்டான்! தழைத்தது வாழ்க்கை!
முதலில் முளைத்த தமிழன் தனக்கு
முதலிடங் கண்டான்! முளைத்ததே இல்லம்!
புதல்வர் மனையாள் பொருளினைக் காக்க
உதவும் வழியை உளத்தினில் எண்ணி
அறிவைத் துணைக்குப் பலநாள் அழைத்தான்;
நெறியை யுணர்த்தி நெடும்புகழ் நாட்டி
இயக்கி உலகை இயக்கிடும் பண்பால்
மயக்கமில் நன்னெறி வாரி வழங்கி
அரசியல் மக்கள் அகம்புறம் என்னும்
முரசொலி கொட்டி முழக்கித் தமிழன்
கடலினைத் தாண்டிக் கயல்புலி வில்லை
இடமகல் அண்டையர் நாட்டின் இடையிலும்
நட்டான்; தமிழன் மெய்க் கீர்த்தியை3 நட்டானே!
எட்டுத் திசையும் இசையில் மிதந்த
கிளியாம் கிரேக்கக் கிளியோபட்ராவிற்(கு)
அளித்த கடல் முத்தம் யார்முத்தம்? மற்றும்நல்
தேக்கு மரத்தைத் திரைகடலின் வாயிலாய்ப்

போக்கியது யாராம்? புலிகயல் மீனவனே!