89
நெஞ்சில் இனிக்க நேர்மை நினைக்க
அஞ்சா தூக்கும் அறம்பயில் கூடம்!
கொடுமை கண்டாற் கொடுவாள் தூக்கும்
கடமை மறவன்! களப்போர் மன்னன்!
பிள்ளை உள்ளம்! பிறர் துயர் காணில்
வள்ளல் மாமழை! வான் கதிர் ஒளியாம்!
செயற்படு செம்மல்! செந்தமிழ்ச் செம்மல்
கயற்படு விழியார் கைம்மை விலக்க
நாட்டில் உழைத்த பாட்டுப் புலவன்!
வீட்டில் நிறைந்த இருளை விலக்கக்
குடும்ப விளக்கைக் கொளுத்திய மேதை!
கடும்பகை எதிர்ப்பினும் கலங்கா நெஞ்சன்!
புதுவைக் கவிப்புலி! புலமைக் கவிப்புலி!
இதுவரை தவழா இனமலர்த் தென்றல்!
பாடித் திரிந்த பைங்குயில்! பாவலர்
தேடித் திரிந்த செந்தமிழ் ஆசான்!
இருண்ட வானி னிடையே தொடுவான்
சுருண்ட அலைகடல் தோன்றிய பரிதி!
‘உடலுயிர் தமிழும் நான்’ என் றுணர்ந்தே
நடந்தோன்; வாழ்நாள் முழுமையும் நடந்தோன்!
இளைஞர் உளத்தே எழுதா ஓவியம்!
கிளைஞர் உளத்துக் கீழ்த்திசை வானம்!
உரம் பெறு நெஞ்சினர்! ஊரிற் சிங்கப்
பரம்பரை கண்டோன்! பாவின் வேந்தே!
ஊனில் உயிரில் உடலில் இனிக்கும்
தேனாம் செந்தமிழ் உலகுக் களித்தோன்!
சங்கத் தமிழும் தமிழின் மேன்மையும்
மங்கா திருக்க வழிவகை செய்தோன்!