பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



2. பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுள் திருமுருகாற்றுப்படையையடுத்து அமைந்திருப்பது பெருநராற்றுப்படையாகும். பரிசில் பெறக்கருதிய ஒரு பொருநனைப் பரிசில் பெற்றானொருவன் கரிகாற் பெருவளத்தானிடத்தே ஆற்றுப்படுத்துவதாக இந்நூல் அமைந்திலங்குகின்றது.

வறுமையால் வாடிய பொருநன் ஒருவன் தன் மனைவியான பாடினியுடன் சுற்றம் சூழத் தன் பசிப்பிணி தீரும் வகையில் பரிசில் வழங்கும் வள்ளலை நாடிக் காட்டு வழியே வருகின்றான். வழிவந்த வருத்தந்திரப் பாடினி, மரத்து நிழலில் தங்கிப் பாலையாழை வாசிக்கின்றாள் சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கண்டு பரிசில் பெற்ற ஒருவன், அவனைக் கண்டு அவன் இயல்புணர்ந்து, ‘நீ வேறொரு வழியிற் செல்லாது இவ்வழியில் வந்ததும் என்னை எதிர்ப்பட்டதும் உன் நல்வினைப் பயனேயாகும். உன் வறுமை உன்னைவிட்டு நீங்குதலை நீ விரும்புவை யாயின் உடனே சுற்றத்துடன் புறப்படுவாயாக, கரிகால் வளவனைச் சேர்ந்து உம் வறுமை புலப்பட அவன் முன்னே நிற்பாயாக; நின்றால் கன்றை ஈன்ற தாய்ப்பசுப் போல் உம்மை நோக்குவான்; அழுக்குப் படிந்து கொட்டைப் பாசியின் வேர் போல் தையலோடு விளங்கும் நும் ஆடையை மாற்றித் துாய்மையானதும், கரையிலே குஞ்சங்களையுடையதும், பட்டினாலாயதுமான உடைகளைத் தருவான்; அம்மட்டோடன்றி, இனிய பூமணம்-