பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17. எதிர்பாரா சில நிகழ்ச்சிகள்

இடையாற்றுமங்கலம் மாளிகையில் மறுநாள் பொழுது புலர்ந்தபோது இந்தக் கதையைப் படிக்கின்ற நேயர்கள் ஏற்கனவே எதிர்பார்த்த சில நிகழ்ச்சிகளும், முற்றிலும் எதிர்பார்த்திருக்க முடியாத சில நிகழ்ச்சிகளும் நடந்தன.

பாதாள மண்டபத்துச் சுரங்கத்திலிருந்து வெளியேறிய தளபதி வல்லாளதேவன் வசந்த மண்டபத்தில் பிரவேசித்ததும், அலங்காரக் கிருகத்தில் பொன்னாலும், மணியாலும் இழைத்த சப்ரமஞ்சக் கட்டிலில் உடலுக்குச் சுகம் தேடுவதைக் கொடுந் தவறாக எண்ண வேண்டிய துறவி கொண்டாட்டத்தோடு படுத்துத் துரங்குவதைக் கண்டதையும், வியந்து நினைத்ததையும், சென்ற பகுதிகளில் கண்டோம்.

அதன்பின் வசந்த மண்டபத்திலிருந்து வெளியேறிச் சென்று முன்பு படுத்திருந்த விருந்து மாளிகைக் கட்டிலில் போய்ப் படுத்துக்கொண்டான். உறக்கம் கண்களைச் செருகவைக்கும் நேரத்தில் யாரோ விளக்கும் கையுமாக உள்ளே நுழையவே ஒளி கண்களில் உறுத்தி விழித்துக் கொண்டான்.

விழித்துக்கொண்டு படுக்கையில் எழுந்து உட்கார்ந்து பார்த்தபோது, நாராயணன் சேந்தன் விளக்கோடு எதிரே நின்று கொண்டிருந்தான். “யார்? சேந்தனா? வா, அப்பா! ஏது இந்த நேரத்துக்கு இப்படி மறுபடியும் வந்தாய்? தளபதி நன்றாகத் தூங்குகிறாரா, இல்லையா என்று பார்த்து விட்டுப்போக வந்தாயோ? அல்லது மகாமண்டலேசுவரரே போய்ப் பார்த்துவிட்டு வா என்று அனுப்பினாரா?” என்று சிரித்துக்கொண்டே சற்றுக் குத்தலாகக் கேட்டான் வீரத்தளபதி வல்லாளதேவன்.

நாராயணன் சேந்தனும் பதிலுக்கு ஒரு சிரிப்புச் சிரித்துக் கொண்டே, தளபதி! உங்கள் கேள்வி விசித்திரமாக அல்லவா இருக்கிறது ? ‘தூங்குகிறவர்களைத் துங்கிக் கொண்டிருக்கிறார்களா? என்று பரிசோதனை செய்ய இங்கிருப்பவர்கள் இன்னும் பித்தர்களாகி விடவில்லை. நானும்