பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

185


என்று கையை விரித்துவிட்டான் கிழவன். இங்கே இவர்களிடம் விசாரித்துப் பயன் இல்லை என்று எண்ணிக் கொண்டு சாலையில் இறங்கி நடந்தான் தளபதி.

போகும்போது கடைசி முறையாக அந்தப் பூக்காரப் பெண்ணை அவன் கண்கள் ஏக்கத்தோடு பார்க்கத் தவறவில்லை. தன்னை ஏமாற்றிய சேந்தன், அவனுடைய சூழ்ச்சிகள் வேறு எத்தனையோ முக்கியமான சிந்தனைகள்-எதுவும் அப்போது தளபதியின் உள்ளத்தில் மேலெழுந்து நிற்கவில்லை. கால்டோன - போக்கில் நடந்து கொண்டே, பொருத்தமில்லாத இடத்தில் பொருத்தமில்லாத அழகை வைத்து விடும் படைப்பின் முரண்பாட்டைச் சிந்தித்துக் கொண்டே சாலையில் நடந்தான். எங்கே போகிறோம் என்ற நினைவே இல்லை அவனுக்கு.


22. அடிகள் கூறிய ஆருடம்

துறவியை நீராடச் சொல்லிவிட்டு அவருடைய பூசைக்கு வேண்டிய மலர்களைக் கொய்வதற்காக நந்தவனத்துக்குச் சென்ற குழல்மொழியை அம்பலவன் வேளான் சந்தித்தான் அல்லவா? மகாமண்டலேசுவரர் உங்களிடம் சொல்லும்படி முக்கிய செய்தி கூறியனுப்பியிருக்கிறார் என்று வேளான் கூறவும் என்ன அவசரச் செய்தியோ?” எனப் பதறிப் போனாள் அவள்.

“அம்மா! வசந்த மண்டபத்தில் தங்கியிருக்கும் துறவியைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொள்ளச் சொன்னார். அடிகள் மாபெரும் சித்துவித்தைகள், மந்திர தந்திரங்கள் எல்லாம் கைவரப்பெற்றவராம். சிறிது மனங்கோணினாலும் சொல்லாமல் இங்கிருந்து மறைந்து விடுவாராம். அவர் இங்கிருந்து மறைந்து விட்டால் அதனால் தென்பாண்டி நாட்டுக்கே பலவிதத்திலும் தீங்குகள் உண்டாகுமாம். கண்ணை இமை காப்பதுபோல் இந்தத் தீவிலிருந்து வெளியேறி விடாமல் அவரைப் பத்திரமாகக் காக்க வேண்டும் என்று கூறி அனுப்பினார்” என்றான் படகோட்டி அம்பலவன் வேளான்.