பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

463


“இருக்காது, அரசே! வந்திருக்கும் ஒற்றன் கூறுவதைப் பார்த்தால் உண்மையாகவே அரசுரிமைப் பொருள்கள் கொள்ளை போயிருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது.”

“எப்படியிருந்தாலும் நாம் படையெடுப்புக்கு ஏற்பாடு செய்யத்தான் போகிறோம். நமக்கு ஏன் இந்தக் கவலை?” சோழனும் கொடும்பாளுரானும் மேற்கண்டவாறு மெதுவான குரலில் பேசிக்கொண்டிருந்த போதும் தேவராட்டியின் கொற்றவைக்கூத்து நடந்துகொண்டுதான் இருந்தது. அவள் வலக்கையில் திரிசூலத்தின் சுழற்சியும், இடக்கையில் உடுக்கின் ஒலியும் குன்றவில்லை, குறையவில்லை.

சோழனும் கொடும்பாளுரானும் வீற்றிருந்த இடத்தின் பின்புறத்துச் சுவரில் அவர்கள் தலைக்குமேல் மானின் கண்களைப்போல் துவாரங்கள் அமைந்த பலகணி ஒன்று இருந்தது.

அருளுற்று ஆடிக்கொண்டேயிருந்த தேவராட்டி திடீரென்று இருந்தாற்போலிருந்தது அந்த மான்விழிப் பல கணியைச் சுட்டிக்காட்டி வீல் என்று அலறிக் கூச்சலிட்டாள். அந்தப் பலகணியை நோக்கித் தன் திரிசூலத்தை ஓங்கிச் சுழற்றினாள் பற்களைக் கடித்தாள். கால்களை உதைத்தாள். திரிசூலத்தைக் குறி பார்த்துச் சுழற்றி, அந்தப் பலகணியை நோக்கி எறிந்தாள். எல்லோரும் அவளுடைய கோபத்தின் காரணம் விளங்காமல் எழுந்திருந்து அந்தப் பலகணியைப் பார்த்தபோது, அதன் நடுத்துவாரத்திலிருந்து ஒளி மின்னும் இரு கண்கள் வேகமாகப் பின்னுக்கு நகர்ந்தன.


24. கூடல் இழைத்த குதூகலம்

அன்றைக்கொரு நாள் செம்பவழத் தீவின் கடை வீதியில் அந்த மூன்று முரட்டு மனிதர்கள் பேசிக்கொண்டு போன பேச்சைக் கேட்டதிலிருந்து மதிவதனிக்குக் கவலையும் பயமும் அதிகமாயிருந்தன. அந்தப் பேச்சை ஒட்டுக் கேட்பதனால்