பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

479


புன்னகை முல்லையாகிப்
புருவங்கள் விற்களாகிக்
கன்னலின் சுவை குயிற்றிக்
கருவிளைக் கண்களாக்கி
மென்நடை பரதமாகி
மெல்லிதழ் பவழமாகிப்
பன்னெடுங் காலமென்னும்
படைப்பினுக் கழகுகாட்டிக்
கன்னிமை யென்னுமோர்
கற்பகம் பழுத்ததம்மா”

சங்கோடு வந்து நின்ற சக்கசேனாபதி அந்த இன்னிசை வெள்ளத்தில் சொக்கி நின்றார். “உங்களுக்கு இவ்வளவு நன்றாகப் பாடவருமா?” என்ற அவர் கேள்விக்குப் பதில் கூறாமலே அவரிடமிருந்து சங்கை வாங்கிக் கொண்டான் அவன்.


26. வம்புக்கார வாலிபன்

குழல்வாய்மொழிக்காக ஏற்பாடு செய்திருந்த கப்பலின் அலங்கார அறைக்குள்ளிருந்து அந்த இளைஞன் சிரித்துக் கொண்டே எதிரே வந்ததைப் பார்த்தபோது நாராயணன் சேந்தனுக்கு ஏற்பட்ட திகைப்பு உடனே கோபமாக மாறியது. வேடிக்கையும், குறும்புத்தனமும் தென்படுகிற சேந்தன் முகத்தில் முதன் முதலாகக் கடுமையான சீற்றத்தைக் காணமுடிந்தது. ‘தம்பி! நீ சரியான திருட்டுப் பயல் என்பதைக் காட்டிவிட்டாயே! நீ பெரிய கள்ளன். இந்தக் கப்பலில் ஏறக்கூடாதென்று கண்டித்துச் சொல்லியும் எங்கள் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு எப்படியோ மாயமாக உள்ளே புகுந்துவிட்டாய். இவ்வளவு தூரம் வம்புக்கு வந்துவிட்ட பின்பு உனக்கெல்லாம் இனிமேல் மதிப்பும், மரியாதையும் கொடுத்துக் கொண்டிருப்பதில் பயனில்லை. நீ என்னிடம் வாங்கிக் கட்டிக்கொண்டுதான் போகப் போகிறாய்” என்று தன்னுடைய