பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

பாண்டிமாதேவி / முதல் பாகம்


இடையாற்று மங்கலம் நம்பியையே காட்டிக் கொடுப்பது போல் ஆகும்.

‘உண்மையில் அகப்பட்டுக் கொள்ள வேண்டியவர்கள் யாரோ அவர்களே தப்பி ஓடிவிட்டார்கள். நான் எதற்காக அகப்பட்டுக் கொள்ள வேண்டும்? வந்த சுவடு தெரியாமல் இங்கிருந்து போய் விடுவதுதான் நல்லது!’ என்று தனக்குள் தீர்மானித்துக் கொண்ட நாராயணன் சேந்தன், கிளையில் தொங்கிக்கொண்டே நுனிவரை வந்து, அப்படியே நிலா முற்றத்துத் தளத்தில் இறங்கினான்.

அவனுடைய நல்ல காலமாக நிலா முற்றத்தில் அப்போது வேறு யாரும் இல்லை. நந்தவனத்தில் ஏற்பட்ட குழப்பத்தால் மகாராணி வானவன் மாதேவியார் உள்பட யாவரும் பரபரப்படைந்து கீழே சென்றிருந்தனர்.

‘இந்த மரம் முறிந்ததும் ஒரு வகையில் நல்லதாகப் போயிற்று, இல்லையானால் அந்தப் பாவிகள் இரண்டாவது முறையாக மகாராணியாரின் மேல் குறி வைத்திருப்பார்கள் என்று எண்ணித் திருப்திப்பட்டான் சேந்தன். வெகுநேரம் கழித்துக் கோட்டையில் சந்தடிகளெல்லாம் அடங்கியபின் வந்த வழியே வெளியேறி இடையாற்றுமங்கலத்துக்குப் புறப்பட்டான் அவன்.


9. ஒலையின் மர்மம்

தானும் மகாமண்டலேசுவரரான இடையாற்று மங்கலம் நம்பியும், அந்தரங்க அறையில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தபோது வெளிப்புறம் யாரோ கதவைத் தட்டும் மணியோசை கேட்டவுடன் தளபதி வல்லாளதேவனால் அது யாராயிருக்கக் கூடுமென்று நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை.

ஆனால் மகாமண்டலேசுவரரான இடையாற்று மங்கலம் நம்பியோ, கதவு திறக்கப்படுவதற்கு முன்பே