பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
12
பாண்டியன் நெடுஞ்செழியன்

வெற்றியும் பெரிதாக இருக்கும். இது காலில் குத்திய முள்ளை எடுத்தெறிவதுபோல முடியப் போகும் போர். இதைப் போர் என்று சொல்லுவதே நம் வீரத்துக்கு இழுக்கு. சில நாழிகைகளில் சேரனை அடி பணியச் செய்து சிறைபிடித்து வருகிறேன்” என்று படைத்தலைவர் கூறினார். அரசன் தன் ஆர்வத்தை அடக்கிக்கொண்டான்.

பாண்டி நாட்டின் எல்லையில் எதிர்ப்பு ஒன்றும் இல்லாததைக் கண்ட சேரமான் தன் படையை நாட்டுக்குள்ளே செலுத்தினான். பாண்டி நாட்டுப் படைத் தலைவருக்கு அவனைச் சிறை செய்ய வேண்டுமென்று ஆசை. ஆதலால் சிலந்தி தன் வலையில் ஈ விழுமட்டும் காத்திருப்பது போலச் சும்மா இருந்தார். தம் நாட்டு எல்லை தாண்டி உள்ளே சிறிது தூரம் வந்த பிறகு சென்று எதிர்த்தார். மதுரைப் படையும் சேரன் படையும் கை கலந்தன. சேரன் படையைப் பாண்டிப்படை நாற்புறமும் சூழ்ந்துகொண்டது.

சில நாழிகையே கடுமையாகப் போர் நிகழ்ந்தது. தம் நாட்டின் எல்லைக்குள்ளே அகப்பட்டுக்கொண்ட பகைவர் படையை எளிதிலே வென்றுவிடலாம் என்று படைத்தலைவர் எண்ணியது நிறைவேறியது. சேரமான் வகை தெரியாமல் அகப்பட்டுக் கொண்டான். போரில் மடிந்தவரும், தம் நாட்டை நோக்கி ஓடின வரும் போக எஞ்சியவர்கள் சிலரே. ஓடுவார் ஓடட்டும் என்று விட்டுவிட்டார் தலைவர். ஆனால் தாம் கூறிய வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டுமென்று கருதிச் சேர அரசனை வெளிச் செல்லாதபடி காக்குமாறு வீரர்களுக்குக் கட்டளையிட்டார். அவன் சிறைப்பட்டான்.