பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வஞ்சினம் வெடித்தது

27

வாழ்கிற குடிமக்கள், பாதுகாப்பைக் காணாமல், எங்கள் அரசன் கொடியவன் என்று கண்ணீர் விட்டுத் தூற்றும் கொடுங்கோலை உடையவனாகுக! உயர்ந்த பெருமையையும், சிறந்த கேள்வியையும் உடைய மருதனாரை முதல்வராக உடைய உலகத்தோடு நிலை பெற்ற பலர் புகழும் சிறப்பையுடைய புலவர்கள் என் நாட்டைப் பாடாமல் போகட்டும்! என்னுடைய பாதுகாப்பில் இருக்கும் உறவினர்கள் துன்புறும்படியும், என்னிடம் இரப்பவர்களுக்கு ஈயாமற் போகும்படியும் வறுமை என்னை வந்து அடையட்டும்!” என்று அரசன் வஞ்சினம் கூறி முடித்தான். சிறிது நேரம் அவையில் ஊசி விழுந்தாலும் கேட்கும் மெளனம் நிலவியது.

மெல்ல மாங்குடி மருதனார் பேசினார். “அரசே, பாண்டிய குலத்தின் குருதி எப்படிக் கொதிக்கும் என்பதை இன்று நன்றாக உணர்ந்தேன்” என்றார். அவர் ஒருவர்தாம் அப்போது பேசமுடியும். அவரும் சுருக்கமாகப் பேசினார். “குலத்தின் பெருமைக்கு ஏற்ற வஞ்சினம் இது. உனக்கு வெற்றி கிடைப்பது நிச்சயம். நீ நீடு வாழ்க!” என்று வாழ்த்தினார். அவை கலைந்தது. போருக்கு ஆயத்தங்கள் நடைபெற்றன.

அரசன் தான் கூறிய வஞ்சினத்தைக் கவியாகவே அமைத்து விட்டான். அவனும் தமிழ்ப் புலமையிற் சிறந்தவன். உணர்ச்சிக் கொந்தளிப்பை உருவாக்கிக் காட்டும் அந்தக் கவிதை புறநானூற்றில் இன்று ஒளிர்கிறது.

‘நகுதக் கனரே நாடுமீக் கூறுநர்;
இளையன் இவன்’ என உளையக் கூறிப்
படுமணி இரட்டும் பாவடிப் பணைத்தாள்