பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் அறிவுரை

59

தான். நாட்டில் குடி மக்கள் எவ்வாறு வாழ்கிறார்கள், என்பதைப்பற்றியே சிந்திக்கவில்லை. பாண்டி நாட்டில் பல இடங்களில் குளங்களும் ஏரிகளும் இருந்தன. அவ்வப்போது அவற்றைக் கண்காணித்துச் செப்பம் செய்து வரவேண்டும். அரசன் கவனம் செலுத்தாமையால் பல குளங்கள் மேடிட்டுப் போயின. பல ஏரிகளின் கரைகள் உடைந்துவிட்டன. இன்னும் பல இடங்களில் மழை பெய்தாலும் தண்ணீரைத் தேக்குவதற்குரிய குளமோ, ஏரியோ இல்லை. இதனால் நாட்டில் வேளாண்மை போதிய அளவுக்குப் பெருகவில்லை. குடிமக்கள் இதுபற்றி அமைச்சர்களிடம் கூறி, தம் குறைகளைப் போக்க வேண்டுமென்று முறையிட்டுக் கொண்டார்கள். அமைச்சர்கள் அரசனை அணுகி எடுத்துச் சொல்ல அஞ்சினார்கள்.

இதுதான் நல்ல சமயமென்று குடபுலவியனார் என்னும் நல்லிசைப் புலவர் அரசனிடம் சென்று குடி மக்களின் குறையைத் தெரிவிக்க முற்பட்டார்.

அரசவை கூடியது. புலவர்களும் அமைச்சர்களும் குடிமக்களிற் சிலரும் அவையில் இருந்தார்கள். குட புலவியனாரும் இருந்தார். அவர் மெல்ல, “ஒரு விண்னப்பம்” என்றார்.

அரசன், “என்ன அது?” என்று வினவினான்.

“சில செய்திகளை அர்சர் பெருமான் திருச் செவியில் ஏறச் செய்ய வேண்டுமென்பது என் ஆசை.”

“சொல்லலாமே!” என்றான் பாண்டியன்.

“சற்றுப் பொறுமையோடு கேட்கவேண்டும்.”