பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
84
பாண்டியன் நெடுஞ்செழியன்

வர்களின் திருமாளிகைகள் இவை. இவற்றில் சிலம்பு ஒலிக்க வானுறையும் அணங்குகளைப் போன்ற அழகிய மகளிர் தாம் அணிந்த வாசனைப் பொருள்களின் மணம் தெருவெல்லாம் கமழும்படி கொடி கட்டிய நிலா முற்றந்தோறும் தம் அழகிய முகத்தை நீட்டி விழாவைக் கண்டுவிட்டு மறைகிறார்கள்.

மழுவை ஏந்திய சிவபெருமான் முதலிய தெய்வங்களுக்கு அந்திக்காலப் பூசை நடக்கிறது. அப்போது வாத்தியங்கள் முழங்குகின்றன. கணவரும் குழந்தைகளும் உடன் வர மகளிர் பூவையும் தூபப்பொருள்களையும் கொண்டு சென்று வழிபடும் திருக்கோயில்கள் பல இருக்கின்றன. வேதம் ஓதிச் சிறந்த ஒழுக்கத்தோடு நின்று இங்கிருந்தபடியே முத்தியின்பத்தைப் பெறும் நிலையையும் அறநெறி பிழையாத அன்புடை நெஞ்சையும் உடைய துறவியர் வாழும் இடங்கள் பல. முக்காலமும் நன்குணர்ந்த சமணர்கள் வாழும் பள்ளிகள் பல.

வழக்குரைப்பாருடைய அச்சத்தையும் வருத்தத்தையும் ஏக்கத்தையும் போக்கி, விருப்பு வெறுப்பில்லாமல் ஆராய்ந்து, நடு நிலைமையிலே நின்று அறத்தையே சொல்லும் அறங்கூறவையத்தைச் சார்ந்த பெரியோர் வாழும் மாளிகைகள் இவை. அரசனிடத்தில் உள்ள நன்மையையும் தீமையையும் உணர்ந்து, அவற்றை மனத்துள் அடக்கிக்கொண்டு, அன்பும் அறமும் அழியாதபடி பாதுகாத்து, பழியை நீக்கிப் புகழ் நிறைந்த இயல்போடு, தலையில் பாகை கட்டிக் கொண்டு தோன்றும், காவிதிப் பட்டம் பெற்ற