பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/98

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
92
பாண்டியன் நெடுஞ்செழியன்

மாகிய கலைஞர்களின் கலையை அமைதியாக இருந்து நுகர்ந்து பரிசு பல வழங்கினான் அரசன்.

குடிமக்கள், தம் குறைகளை வேண்டும் பொழுதெல்லாம் அரசனை அணுகி எடுத்து இயம்பி, அவன் அவற்றைக் கேட்டு ஆவன செய்வதனால் குறைகள் நீங்கி இன்பம் பெற்றார்கள். தொழிலும் கலையும் சிறந்து விளங்கின. அறம் மலரவும் பொருள் கனியவும் இன்பம் பொங்கவும், மக்கள் தம் அரசனைப் போல வீட்டு நெறிக்குரிய நற்செயல்களைச் செய்வதனால் அமைதி பெருகவும் எங்கும் வள வாழ்வு மல்கியது.

புறப் பகைகளைக் களைந்து வென்று மிடுக்கிலே தலை நிமிர்ந்து நின்ற பாண்டியன் நெடுஞ்செழியன் இப்போது அறத்துறைகளை நிறைவேற்றி, மெய்ஞ்ஞான நெறியிலே சிந்தையைச் செலுத்தி, இறை வழிபாடும் பெரியோரைப் பேணலாகிய நற்செயல்களைத் தவறாமற் செய்து, அமைதியும் நிறைவும் பெற்று வாழ்ந்தான். அகப் பகையாகிய போர் ஆசையும் பேராசையும் அவனிடமிருந்து ஒழிந்தன.

அவன் புகழ் நாடுகடந்து சென்றது. தண்டமிழ்ப் பாடல்களில் நின்று காலங் கடந்தும் வந்து அப்புகழ் மணக்கிறது.