உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

பாண்டிய மன்னர்


அதன் பிறகு மாந்தர் அனைவரும் அவன் குடை நிழலின் கீழ் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். தமிழ்ப் புலவர் பலரைத் தனது அவைக் களத்துக்கு வருவித்து அவர்களோடு அளவளாவி யின்புறும் வழக்கம் உடைய இந்நெடுஞ்செழியன் ஒரு நாள் அறிஞர் நடுவண் அமர்ந்திருக்கையில் மதுரை நகரத்துப் பெருங்கணக் காயர் தம் மாணவர் பலரையும் உடன் கொண்டு அரசனைக் காண வந்தார். அரசன் அம்மாணவச் சிறுவர்க் ரெல்லாம் உரிய ஏவலர்களைக் கொண்டு சிற்றுண்டிகள் வழங்கச் செய்வித்துப் புலவர்கள் முன்னிலையிற் கல்விப் பெருமையினைப்பற்றிப் பின் வருமாறு அம்மாணாக்கர்க் குதவுமாறு பிரசங்கித்தான்:

“தமிழ் என்னும் அளப்பருங்கடலிடைக் குளிக்கும் கருத்தோடு கரையில் நிற்கும் சிறார்களே, தமிழ்க்கடல் படிந்து கரையேறியுள்ள புலவர் பெருமக்கள் முன்னிலையில் உங்களுக்கு யான் கூறலாகும் அறிவுரை இதுவாம்: கல்வி யென்பது செல்வத்திலும் சிறந்தது என்ற உணர்ச்சி முதற்கண் உங்களுக்கு வேண்டுவதாம். இளமைப்பருவமே கல்வியைத் தேடற்குரிய பருவம் என்று எவரும் கூறுவர். மனிதன் ஆயுட்காலமெல்லாம் கல்வியைத் தேட வேண்டியவனே.. இந்நாட்டில் என் முன்னோராகிய அரசர் பலர் இருந்தனர். அவர் காலத்தில் அனேக வீரர் இருந்தனர். அவர் பெயரெல்லாம் இக் காலத்தில் நாம் கேட்டலாகா வண்ணம் மறைந்தன. ஆனால், அக்காலத்தில் இருந்த கல்வி வல்லார் தம் செய்யுட்களால் தம் புகழை வளர்த்துக்கொண்டதோடு தம்மை ஆதரித்த புரவலர் பெருமையையும் உலகறியச் செய்யும் சிறப்பைப் பெற்றனர். இதனால் நாம் அறிவதென்ன? அழியாத புகழ் பெறுதற்கு விரும்பும் ஒருவன் தான் தேடுதற்குரிய அரும்