பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரியப்படை கடந்த......நெடுஞ்செழியன்

121

படத் தக்கவனும் இவன் அல்லன்,” என்று பொற் கொல்லனைப் பார்த்துக் கூறினர். அதற்கு மறு மொழியாகப் பெரும்பாவியாகிய அக்கொல்லன் களவு நூல் ஏதுக்களைக் காட்டிப் பின் வருமாறு கூறினன்:

“மந்திரம், தெய்வம், மருந்து, நிமித்தம், தந்திரம், இடம், காலம், கருவி என்ற எட்டையும் கள்வராவார் துணையெனக் கொள்வார். இக்கள்வனது வலியை யழித்துத் தப்புவதற்கு அறியாது இவன் பிரயோகிக்கும் மருந்திற் பட்டீராயின் நுமது பெரிய புகழ் மிக்க வேந்தனால் மிகவும் கடுமையாகத் தண்டிக்கப்பெறும் நிலைமையை அடைவீர், கள்வர்தாம் உருவேற்றியுள்ள மந்திரத்தை நாவால் வழுத்துவாராயின், அவரை நாம் கண்ணாற் காண இயலுமோ! தேவரைக் காணினும், காணலாம்; மந்திரம் பயின்ற கள்வரைக் காணல் எளிதன்றே? இவர்கள் தாங்கள் ஆதரித்து வணங்கும் தெய்வத்தின் அனுக்கிர கத்தைப்பெற்றுத் தமக்கு முன்னின்று உதவப்பெற்று விட்டாராயின், கையிற் சிக்கிய பொருளை நம் கண் முன்னே காட்டியும் மறைத்து விடுவர். இவர் மருந்தினாலே நம்மிடத்தில் மயக்கம் செய்வராயின், நாம் இருந்த இடத்தை விட்டுப் புடை பெயர்ந்து செல்ல இயலுமோ? இவர் தாம் கருதிய சகுனம் வாய்த்தால் அல்லாமல், பெறுதற்கரும்பொருள் கைக்கண் வந்து புகுமாயினும் எடுத்துக்கொள்ளார். களவு நூற்சொல்லிய தொழில்களை எண்ணிச் செய்வாராயின், தாம் மண்ணுலகத்திலேயே யிருப்பினும் தேவலோக வாசியாகிய இந்திரன் மார்பில் உள்ள ஆரத்தையும் கவர்ந்து கொள்வார். இவ்விடத்திலே இப்பொருளைக் கவரலாம் என்னில், அவ்விடத்திலே அவரை யார் காண வல்லவர்? காலம் அறிந்து அவர் நினைந்த பொருளைக் கைக்கொண்டு விடுவாராயின், மேலோராயினும் விலக்க வியலுமோ? தக்க கருவிகளைத் துணையாகக் கொண்டு பெறற்கரும்பொருள்களைக் கைப்பற்றுவார்க ளாயின், இவ்வுலகில் அவர் செயலை யாவரே கண் கொண்டு காண வல்லார்