உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

பாண்டிய மன்னர்

சுண்ணம், மான்மதச் சாந்து, கண்ணி, பிணையல், கவரி, தூபம் முதலியவற்றை ஏந்தி, முன் செல்வாராயினர். கூனும் குறளுங்கூடிய குறுந்தொழில் இளைஞர் செறிந்து சூழ்ந்தனர். ‘வையங் காக்கும் பாண்டியன் பெருந்தேவி வாழ்க,’ என்று பேரிளம் பெண்டிர் பலர் வாழ்த்தினர். தன்னைச் சூழ்ந்து வந்த பெண்கள் கூட்டத்தோடு கோப்பெருந்தேவி அரசனை யடைந்து, தான் கண்ட தீக்கனாவை உரைத்தாள். அதைக் கேட்டு இன்னது விளையும் என அறியானாய், அரியணைமீது அமர்ந்திருந்தான் அம் மன்னர் பெருமான்.

இங்கு இவன் இவ்வாறு இருக்கக் கண்ணகி அரண்மனை வாயிலில் வந்து நின்று கொண்டு, “வாயிலோயே, வாயிலோயே, அடியோடு அறிவிழந்து, செல்லும் நெறி யறியாது மயங்கிய மனத்துடன் அரச நெறி பிழைத்த பாண்டியன் அரண்மனை வாயிலகத்துள்ள வாயிலோயே, ‘இரட்டைச் சிலம்புகளில் ஒன்றை ஏந்திய கையினள், கணவனை இழந்தவள், வாயிலகத்திருக்கின்றாள்,’ என்று அறிவிப்பாய்,‘ என்றாள். அதுகேட்ட வாயில் காவலன், அரசன் முன் சென்று நின்று,

“தென்னம் பொருப்பிற் றலைவ வாழி!
செழிய வாழி! தென்னவ வாழி!

பழியொடு படராப் பஞ்சவ வாழி!”[1]

என்று அவனை வாழ்த்திவிட்டு, “அரசே, மகிஷாசுரனைச் சங்கரித்து, அவன் முடித் தலைமேல் ஏறிய துர்க்கையல்லள்; சப்தகன்னியரில் இளைய நங்கையாகிய பிடாரியும் அல்லள்; இறைவனைத் தன்னொடு ஒப்ப ஆடச்-


  1. சிலப்பதிகார்ம்-வழக்குரை காதை