உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

பாண்டிய மன்னர்

கத் தன் தேவியின் சிலம்பைக் களவாடினன் என்று பொற்கொல்லன் சொல்லாற் குற்றவாளியெனத் தான் கருதிய கோவலனுக்கு விதித்த தண்டம் பொருத்த முடைத்தன்றே ? செங்கோன்மைச் சிறப்பே தன் சிறப்பாக எண்ணியிருந்த நெடுஞ்செழியன் இவ்வண்ணம் செய்தது எவ்வாறு பொருந்தும்?’ எனவெழும் வினாக்களுக்கு விடையிறுத்தல் எளிதன்று. சாமானியமாகக் களவு செய்தாரைக் கையறுத்தலே தண்டமாம். ஆயினும், அரசனது தேவி சிலம்பைக் களவாடிய ஒருவன் கள்வருள் மிகவும் பயின்று தழும்பேறியவனாதலால், அவன் வேறு பல பாவங்களும் செய்து குடி மக்கட்குத் தீங்கு இழைக்கக் கூடுமாதலால், அத்தகையானைக் கொல்லுதலே முறையென்று அறிவுடையார் சொற்கேட்டு விதித்துக்கொண்டனன் போலும், கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று என்று நெடுஞ்செழியனே கூறுதலால், மாந்தராவார் எல்லாம் அவ்வாறு தண்டித்தல் பொருத்தம் என்றே அங்கீகரித்திருந்தனர் என்று அறியலாம். கள்வருக்குச் சிறை வாசம் விதிக்கும் இந்நாள் முறைபற்றி முன்னோர் முறையை யாராய்தல் பொருத்தம் உடைத்தன்றாம்.

“மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்
கையிற் றனிச்சிலம்புங் கண்ணீரும்-வையைக்கோன்
கண்டளவே தோற்றான் அக் காரிகைதன் சொற்செவியில்

உண்டளவே தோற்றான் உயிர்.”[1]

  1. சிலப்பதிகாரம் - வழக்குரை காதை