பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாண்டியன் பல்யாகசாலை...பெருவழுதி

13

களை யெல்லாம் அவர்கட்கு நன்கு போதித்து, பாரத பூமியின் வடவெல்லையாகிய இமய வரையை அணுகச் சென்றனன் பாண்டிய மன்னன். வழிகளில் வென்ற மன்னரது உதவிப் படையும் பொருளும் விருதுகளும் பிறவும் பெற்றதால், பாண்டிய நாட்டிலிருந்து புறப்பட்டபோதிருந்ததைக் காட்டிலும் பன்மடங்கதிமாய் விருத்தி யடைந்திருந்த படையோடு இமய மலை அடைந்து, மலைச்சாரலில் சில நாள் தங்கிப் புண்ணிய க்ஷேத்திரங்களைத் தரிசித்து மகிழ்ந்து பாரத பூமி முழுவதையும் தன்னடிப்படுத்திய பெரு மகிழ்ச்சியோடு தெற்கு நோக்கிப் புறப்பட்டனன். திரும்புகாலில் வேறு வழியாய் வந்ததால் அங்கிருந்த சில நாடுகளையும் வென்று அடக்கித் தமிழ்க்கொடி பறக்கச் செய்தான். தமிழ்நாட் டெல்லைக்கருகில் நெருங்கி வந்துகொண்டிருக்கும் நிலையிற் சிற்றரசன் ஒருவன், இவன் செயலை நன்கு அறியானாய், அறிவுடையார் சொற்கேளானாய்த் தனது அரணை யடைத்து உள்ளிருந்தனன். அதனைக் கேட்ட பாண்டியன் புன்சிரிப்புக் கொண்டு, பின் வருமாறு விளம்பரங்கள் எழுதுவித்து, பறவைகளாலும் பிற உதவிகளாலும் அந்நாட்டிற் பரப்புவித்தான் :

“பசுக்களும், பசுப் போன்ற நல்லோராகிய அந்தணரும், பெண்டிரும், பிணியாளர்களும், பிதிர்களுக்குக் கர்மம் செய்தற்குரிய ஆண் மக்களைப் பெறாதவர்களும், தக்க காவ லிடங்களை நாடிச் சேர்க. நாங்கள் விரைவிலே அம்பு விடப் போகின்றோம்.”

இவ்விளம்பரச் செய்தியை அறிந்த குடிகள் தக்கவாறு ஒதுங்கினர். பிறகு பெரும்போர் நிகழ்ந்தது.