பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

பாண்டிய மன்னர்

பாண்டியன் வெற்றிவீரனாய் விளங்கினன். அவ்வரசனும் தன் அறியாமைக்கு வெட்கி வணங்கினன். அருளின் திறத்தை அறிந்த முதுகுடுமிப் பெருவழுதி அவனையும் அன்போடு ஆண்டனன். இவ்வாறு போர் நிறைவேற்றிப் பாண்டியன் தன் நாடு நோக்கித் திரும்பினன். குடி மக்கள் மகிழ்ச்சியின் மிகுதியால், பல நாளாகப் பிரிந்திருந்த மன்னவர் பெருந்தகையை மந்திரியோடு வந்து வரவேற்றனர். அவ் வமயத்தில் அமைச்சர் தலைவர், குடிகளின் சார்பாக அரசற்கு வரவேற்புபசாரம் கூறினர். அரசனுடன் கூடவே சென்று அவன் செய்த போர்களை யெல்லாம் கண்டு மகிழ்ந்த நெட்டிமையார் என்ற புலவர், பின்வரும் கருத்தமைய ஒரு பாடல் பாடினர்:

“பசுக்களும், பசுப்போன்ற இயல்புள்ள பார்ப்பன மாக்களும், பெண்டிரும், பிணியாளர்களும், அன்போடும் சிரத்தையோடும் பிதிர் லோகவாசிகட்கு உரிய கருமங்களை இயற்றும் ஆண் மக்களைப் பெறாதவர்களும் விரைவிலே எம் அம்புகளை ஏவப்போகிறோம் தத்தமக்கேற்ற காவலிடங்களிலே போய்ச் சேர்க, என்று தர்ம மார்க்கத்தைச் சொல்லும் கொள்கையையுடைய வீரத்தாற் சிறந்து அரசுவாவின்மீது அமர்ந்து, வெண்கொற்றக்குடை கவிக்கப்பெற்று, மீனக்கொடிகள் ஆகாய வீதியில் நிழல் பரப்ப வருகின்ற எம் மன்னவன் வாழ்க; குடுமி என்ற பேராசன் வாழ்க. செந்நிறமுடைய பசும்பொன்னைக் கூத்தர்க்கு வழங்கிய கடற்றெய்வத்திற்குரிய விழாவை நடத்திய நெடியோன் என்ற வழுதியர் பிரானால் அமைக்கப்பட்ட நன்னீர் நிறைந்த பஃறுளியாற்றில் உள்ள மணலினும் மிக்க எண்ணுள்ள ஆண்டுகள் வாழ்க.”