பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

பாண்டிய மன்னர்

றிருப்பதாய் எண்ணுவது அறிவின்மையே. பிரத்தியக்ஷம் ஒன்றே பிரமாணம். இல்லாத ஒன்றைப்பற்றி ஊகிப்பதும் பிறர் சொல்லைக் கேட்டு நம்புவதும் குற்றமே. தெய்வம் என்பது உள்ள பொருளாய் இருந்தால், நம் கண்ணுக்குத் தோன்ற வேண்டும். எவரோ உண்முகப் பார்வையாற் கண்டார் என்று கூறுவதெல்லாம் மயக்கம், எல்லா இந்திரியங்களும் நன்கு இயங்கும் போது காணப்படாத பொருளை அவை அடங்கிய போது காண்பது என்று கூறுவது மலடி மகன் ஆகாயப் பூவைக் கொய்து முயற் கொம்பிலே சூட்டிய வண்ணமே யாம். வேறோர் உலகம் உண்டு என்பதும், இங்குள்ள இன்ப துன்பங்களின் பயனும் காரணமும் அவ்வுலகத்தில் அறியப்படும் என்று கூறுவதும் பிரத்தியக்ஷ சித்தமல்ல. இவ்வுலகில் உள்ள இன்பங்களை ஐந்து இந்திரியங்களாலும் வேண்டுமட்டும் அனுபவிப்பதே உயர் வாழ்வு. அவ்வாறு இன்புறாது வருந்திக் கழி வதே இழிவாழ்வு. இவற்றின் வேறாக வாழ்வு தாழ்வுகள் இங்கும் எங்கும் இல்லை. பிறந்தவன் வாழ்வும் தாழ்வும் அவன் இறப்போடு ஒழிந்தன. அதற்குமேல் ஒன்றும் இல்லை.”

சமணர்:–“வாலறிவன், மலர்மிசை யேகினான், வேண்டுதல் வேண்டாமையிலான், இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன், அறவாழி யந்தணன், எண் குணத்தான் என்ற சிறப்புப் பெயர்களைத் தனக்கு உரிமையாய்க் கொண்டவனும், எல்லாக் கர்மங்களையும் வேருடன் களைந்தவனுமாகிய ஜிநேந்திரனைத் தெய்வமாய்க் கொண்டதும், நவ பதார்த்தங்களைக் கொண்டதும் எங்கள் கொள்கையாம். ஸம்ஸாரம் என்ற கொடிய நோயை ஒழித்து, மோக்ஷம் என்ற ஆனந்தத்தைப் பெற முயல்வதே ஜீவனது கடமை. அதற்கு வழி, தூய காட்சி, தூய அறிவு, தூய ஒழுக்கம் என்ற மும்மணிகளே, இம்மூன் றில் ஒன்றும் தனித்து நின்று பயன் தரவல்லதன்று. இம்மூன்றும் ஒன்று சேர்ந்தே உயர்ந்த பயனை அளிக்க வல்லவையாம்.