பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாண்டியன் பல்யாகசாலை...பெருவழுதி

51

தமிழ் நாடெங்கும்,-ஏன் ?-- இப்பாரத பூமியெங்கும் நின் குடையின்கீழ் வாழும் குடிகள் அனைவரையும் வாழ்த்தியதாம். அரச வாழ்த்தே அவன் ஆளுகைக் குட்பட்ட மக்களுக்கும் வாழ்த்தாம் என்பதே அறிவுடையார் கொள்கையாம், என்று கூறினர்.

இவ்வுரையைக் கேட்ட புலவ ரவைக்களத்தார் அனைவரும் பேரானந்தம் எய்தினர். 'பெரியோர் வாக்கிலன்றிப் பெரும்பொருள் வெளிப்படுமோ?' என்று அனைவரும் ஒரு முகமாய்க் கூறினர். அரசனும் மனமகிழ்ச்சியோடும் முக மலர்ச்சியோடும் நுழைநூற் பட்டால் நெய்து பொன்னூலால் அழகிய பூத்தொழில் செய்யப் பெற்றதொரு பெருமதிப்புள்ள பட்டாடையைக் காரி கிழார்க்குப் போர்த்து, பொற்கலத்திலே ஆயிரம் பொற்காசுகளை வைத்து, “பெரியீர், நும் செய்யுள் அமைவின் சிறப்பை யான் இவ்வளவேயாக மதித்தேன் என்று எண்ணாது, நுமது அருளுரையே அறிவுரை யாக்கொண்டு யான் வாழக் கருதியுள்ளதைத் தெரிவிக்கும் முகத்தால் நுமக்குக் கொடுக்கும் கையுறையாக இதனை யேற்றுக்கொள்ள வேண்டுகின்றேன்," என்று கூறிக் கொடுத்தான். புலவர் அதனை முகமலர்ச்சியோடு பெற்றுக்கொண்டு வந்தனம் கூறினர்.

பிறகு அரசன் அங்கு வந்திருந்த புலவர்க்கெல்லாம் உபசார மொழிகள் கூறிப்புலவர் புடைசூழவெளியேறி ஆத்தான மண்டபம் அடைந்து, அமைச்சரோடு வீற்றிருந்து, அரசியல் வினையைக் கவனிக்கலாயினன். அன்று முதல் காரி கிழார் பாண்டிய நாட்டுப் புலவராகவே வாழ்ந்து, உரிய காலங்களில் அரிய செய்யுட்களைச் செய்து, உலகை வாழ்வித்து வந்தனர்.