பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

பாண்டிய மன்னர்

அறியாததன்றே? ஆகையால், இன்னும் அதிக நஷ்டம் அடையாமல் நாட்டில் நன்கு வாழ எண்ணம் இருப்பின், இன்று இரவே சமாதானத்துக்கு வரலாம். இல்லையென்றால், நாளைக் காலையில் மறுபடியும் போர்க்கு வந்து, எது விளையுமோ அதனைப் பெறலாம். தம் பெருமையைக்காட்டிலும் நாட்டின் நன்மையைப் பெரிதாய்க் கருதி அமைதிக்கு வருவீர்கள் என்பதே எமது நோக்கமாம்.

சோழனும் சேரனும் இவையனைத்தையும் கேட்டுச் சிறிது நேரம் தனித்து யோசனை செய்து ஒரு தீர்மானத்துக்கு வந்தனர். பிறகு தூதனை முன்னே யனுப்பித் தாமும் பின்னே புறப்பட்டுப் பாண்டியன் பாசறையடைந்தனர். இவ்வாறு நேரிடும் என்பதை முன்னே எதிர்பார்த்திருந்த நன்மாறன் தனது பாசறை வாயிலில் வந்து நின்று இருவரையும் முக மலர்ச்சியோடு வரவேற்றான்; உள்ளே அழைத்துச் சென்று, அவ்விருவர்க்கும் தக்க ஆசனங்களை அளித்துத் தானும் தன் ஆசனத்தில் அமர்ந்தான். பாண்டிய நாட்டுத் தண்டத் தலைவரும் அங்கு இருந்தனர். பிறகு பின் வரும் சம்பாஷணை நிகழ்ந்தது:

பாண்டியன்:- மன்னர்காள், நும் வரவு நல்வரவாகுக. நுமது நாட்டின் நலத்தைக் கருதி எமது வேண்டுகோளைப் பொருட்படுத்தியதற்காகப் பெரிதும் உம்மைப் பாராட்டுகின்றோம்.

சோழன்:- மன்னர் பிரானே, நாட்டின் நலத்தைக் கருதுவதே நம் நாட்டம் என்பதை நான் கூற வேண்டா! மானம் படவரின் வாழாமை யினிதன்றோ? வணங்கா முடி மன்னராய் இருக்கும் வாழ்வு ஒரு