பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

பாபு இராஜேந்திர பிரசாத்

காலமாதலால் ராஜன் பாபு அதைத் திறமையாகச் சமாளித்தார். முஸ்லீம் லீக் கட்சியுடனும், அதன் தலைவரான ஜனாப் ஜின்னாவுடனும் சமரசம் கண்டிட ராஜன் பாபு பெரும் முயற்சி மேற்கொண்டார். ஆனால், முஸ்லீம்களுக்கென தனிநாடு தேவை என்ற கோரிக்கையை ஜின்னா கைவிடுவதாக இல்லை. அதனால், ராஜன் பாபு செய்த சமரசப் பேச்சு வெற்றி பெறாமல் போய்விட்டது.

பாரதம் சுதந்திரம் பெற வேண்டுமானால், ஓர் அரசியல் சட்டம் தேவை அல்லவா? அந்தச் சட்டத்தை எழுதுவதற்காக ஓர் அரசியல் நிர்ணய சபை அமைக்கப் பெற்றது. அந்தச் சபைக்குத் தலைமை ஏற்றிடத் தகுதி பெற்றவர் ராஜேந்திர பிரசாத் என்று ஒருமனதாக அந்தச் சபை தீர்மானம் செய்தது.

இடைக்கால அமைச்சரவையில் உணவு அமைச்சராக இருந்த ராஜன்பாபுவை அரசியல் நிர்ணய சபைத் தலைவராக்கினார்கள். இந்த அவை, டாக்டர் அம்பேத்கர், கே.எம். முன்ஷி, அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் போன்ற பேரறிஞர்களின் துணையோடு இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கித் தந்தது.

இதற்கிடையில், முஸ்லீம் லீக் கட்சியின் வைராக்கியத்தால், காங்கிரஸ் கட்சி நாட்டுப் பிரிவினைக்குச் சம்மதிக்க வேண்டியதாயிற்று. 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15 ஆம் நாள், இந்திய நாடு, இந்துஸ்தான், பாகிஸ்தான் என்ற இரு சுதந்திர நாடுகள் ஆயிற்று.

மகாத்மாக காந்தியடிகளின் தலைமையில் நடந்த அறப் போராட்டங்களால் இந்தியாவுக்கு விடுதலை கிடைத்தது. நாமும் இன்று சுதந்திர பாரதத்தில் வாழ்கின்ற நிலை உருவானது. காந்தியண்ணலின் உழைப்பு வெற்றி பெற்றது; பாரதத்தலைவர்கள், மக்கள் கனவுகள் சுதந்திரமாகப் பலித்தன.