பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

பாப்பா முதல் பாட்டி வரை

பாதித்தாலும், அக் குழந்தையின் உடல்நலம் மிகவும் கெட்டு, நோயின் சின்னம் மிகவும் தீவிரமாக வெளியே காணப்படும். இதன் காரணம்; குழந்தைப் பருவத்தில் மார்பின்மீது தசை வளர்ச்சி குறைவு; இதயம் முழு வளர்ச்சியடைந்து, ஒழுங்கான நிலையை அடைவதில்லை; தலையெலும்புகள் ஒன்றுடன் ஒன்று கூடாது, பிரிந்த நிலையில் இருக்கின்றன. இதனால் நோயின் சின்னங்கள், முழு வளர்ச்சியடையாத உறுப்புக்களின் வழியே வெளியே தோன்றும் போது, மிகவும் வேறுபாட்டுடனும், கொடுமையாகவும் காணப்படுகிறது. இரண்டாவதாகக் குழந்தையின் உடலானது, வளர்ச்சிப் பருவத்தில் இருக்கின்றது. புரோட்டீன், வைட்டமின்கள், உப்புக்கள் முதலியன, முதிர்ந்தவரின் தேவையை விட அதிக அளவில் குழந்தையின் உடல் வளர்ச்சிக்கு வேண்டியிருக்கின்றன. இவைகள் உணவாகவே குழந்தையின் உடலை அடைய முடியும். பேதி போன்ற நோய் ஏற்படுகையில், குழந்தை இரண்டுவித கஷ்டங்களுக்கு உள்ளாகின்றது. அளித்த உணவை ஏற்றுக்கொள்ள முடியாமல், குடல் அசீரண நிலையில் இருப்பது ஒன்று; உடலில் கொஞ்ச நஞ்சமிருக்கும் சத்துப் பொருள்களும், பேதி வழியே வெளியேறிவிடுவது மற்றொன்று. அதனால் நாலைந்து தடவைகள் பேதி ஆனதும், நாடி பலவீனமடைந்து, கண்கள் ஒளி மங்கி, உச்சிக்குழி பள்ளமாகித், தோல் சுருங்கிக் காய்ச்சலுடன் குழந்தை மிகவும் பலவீன நிலையை அடைந்துவிடுகிறது. குழந்தைகளுக்கெனத் தனிப்பட்டு வரும் சில நோய்களுக்குக் காரணம் குழந்தைகளின் உடலமைப்பே தான். இப் பருவத்தில் உடல் உறுப்புக்கள் வளர்ச்சியடையும் நிலையில் இருக்கின்றன. கணைநோய், சொறி கரப்பான் என்னும் நோய்கள் வேகமாக வளர்கின்ற எலும்புகளை எளிதில் தாக்கி, நோயை உண்டாக்கி விடுகின்றன. குழந்தைப் பருவத்தில் நோயைத் தடுக்கும் இயற்கையான சக்தி மிகவும் குறைவு. அதன் காரணமா-