பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

பாப்பா முதல் பாட்டி வ்ரை

இப்படிப்பட்ட குழந்தைகள் உணவு உட்கொண்ட உடனேயே, ஒரு முறை நீராக மலம் கழிப்பதுண்டு. இதைத் தவிர டைபாய்டு, நிமோனியா போன்ற காய்ச்சலின் போதும் குழந்தைக்குப் பேதி வருவது வழக்கம். சாதாரண பேதியாகத் தொடங்குவது, பிறகு சீதபேதியாக மாறுவதும் உண்டு.

விஷக்கிருமிகளால் ஏற்படும் பேதி : பெரும்பாலும் கோடை காலத்திலே வருவதால், கோடை கால பேதியெனவும் அழைக்கப்படும் இந்த பேதிக்குக் காரணங்கள்: 1. கிருமிகளைக் கொல்ல உதவும் ஹைடிரோ குளோரிக் அமிலம் குழந்தைகளின் இரைப்பையில் குறைவாக இருப்பது. 2. பால் அல்லது வேறு உணவுப் பொருள் நன்றாகக் காய்ச்சிச் சுத்தப்படுத்தாது அளிப்பது. 3. நல்ல வெயில் அல்லது நல்ல மழை இவை இரண்டும், கிருமிகள் விருத்தியடைய உகந்த காலம்.

இந்த வகை பேதி, குழந்தையை மிகவும் கடுமைாகப் பாதிக்கின்றது. இதில் மூன்று வகைகள் உண்டு. 1. பத்துப் பதினைந்து தடவைகள் மலம் மட்டும் வெளிப்படும் சாதாரண வகை. 2. காய்ச்சலுடன் பேதி, 3. காலரா நோயைப் போல் நீரான மலம் வெளிப்பட்டு, அபாயம் விளைவிக்கும் கொடிய பேதி.

நோய்க்குறிகள் : திடீரென்று அடிக்கடி இளகலான மலம் கழிக்கத் துவங்கிப் பிறகு பேதியாக முடிவடையலாம். முதல் தடவை கெட்டியாக வெளிப்பட்ட மலம், அடுத்த முறை சிறிது நெகிழ்ந்து, முடிவில் நீராக வெளிப் படலாம். முதலில் மஞ்சள் நிறமாக இருந்த மலம், சிறிது பொழுதில் பச்சை நிறத்தை அடைந்து, முடிவில் இரத்தமும் சீதமுமாகக் காணப்படலாம். பேதி மிகவும் கடுமையாக மாறிவிட்டால், மலம் சாணிநீர் போன்ற தோற்றத்தில் மிகவும் துர்நாற்றத்துடன் இருக்கும்.