பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

பாப்பா முதல் பாட்டி வரை

ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பம் தரித்தது முதலே, உடல்நிலையை அக்கறையுடன் கவனித்துக் கொண்டு மருத்துவர் சொல்லும் ஆசோசனைகளைக் கடைப் பிடித்தால் சுக பிரசவத்துக்கு அதிக வாய்ப்புண்டு. குடும்பத்தில் யாருக்காவது சர்க்கரை நோய் இருந்தால் கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு மாதமும் ரத்தப் பரிசோதனை செய்து கொள்ளுதல், இரத்த அழுத்தத்தை இயல்பான நிலையில் வைத்துக் கொள்ளுதல்,

கர்ப்ப காலம் முழுவதும் உடல் எடை 10 கிலோவுக்கு அதிகமாகாமல் பார்த்துக்கொள்ளுதல், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 11 கிராமுக்குக் குறையாமல் பார்த்துக்கொண்டு, ரத்த சோகை ஏற்படாமல் தடுத்துக் கொள்ளுதல் ஆகிய முன் பேற்றுக் கவனிப்பு மூலம் சுகப்பிரசவத்தை அடைய முடியும். ரத்த சோகை வராமல் தடுத்துக் கொள்ள, இரும்புச் சத்து நிறைந்த கீரைகள், காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மருத்துவருக்கு ஆறுதல் எது : என்ன தான் மருத்துவம் முன்னேறியிருந்தாலும், சிசேரியன் உள்பட எந்தவித அறுவை சிகிச்சையானாலும், சிறிதளவு ஆபத்து இருக்கத்தான் செய்கிறது. எனவே, பெற்றோரைப் போலவே சுகப் பிரசவம் மட்டுமே மருத்துவருக்கு மிகுந்த ஆறுதலையும், பெருமூச்சையும் அளிக்கக்கூடிய விஷயம். மருத்துவச் செலவு அதிகரித்துள்ளதை யாரும் மறுக்க முடியாது. இதைக் கருத்தில் கொண்டு பணத்துக்காக அதிக அளவு சிசேரியன் அறுவைச் சிகிச்சைகள் செய்யப்படுகின்றன என்ற கருத்தை மக்கள் மாற்றிக்கொள்வது அவசியம். தாய் - சேய் இருவருமே, நலமே ஒரு நல்ல மகப்பேறு மருத்துவரின் அக்கறையாக இருக்க வேண்டும்.