17. லா. ச. ரா—வும் மௌனியும்
சிறுகதைக் கலையில் அற்புதங்களைச் சாதித்துள்ள படைப்பாளிகள் மெளனியும், லா. ச. ரா.வும் விசேஷமானவர்கள்.
அவ்விருவரது சிறுகதைகளையும் ஒப்பிட்டு ஆராய்வது இலக்கிய மாணவர்களுக்குப் பயனுள்ள விஷயமாக அமையலாம். இருவரும் தனி நபர்களின் அக உளைச்சல்களையும், சிந்தனைகளையும், நினைவு ஓட்டங்களையும் திறமையோடு சித்திரித்திருக்கிறார்கள். ஆண் பெண்ணை எண்ணி ஏங்குவதை உணர்ச்சி பூர்வமாகக் கதையாக்கியிருக்கிறார்கள்.
மெளனியை விட, லா. ச. ரா. அதிகமான விஷயங்களை—பலதரப்பட்ட விஷயங்களை—கதைப் பொருளாக்கியிருக்கிறார், லா. ச. ரா. கதை கூறும் முறையிலும் வெவ்வேறு உத்திகளைக் கையாண்டிருக்கிறார். கொச்சை நடையை மிகுதியாகப் பயன்படுத்தியிருக்கிறார். உரையாடல், நினைவு கூர்தல் ரீதியில் அதிகம் எழுதியிருக்கிறார்.
இத்தகைய தன்மைகள் பலவற்றையும் சுவைத்து ஒப்பிடுவது இலக்கிய ரசிகர்களுக்கு சுவாரஸ்யமான விஷயம் ஆகக்கூடும். அவ்வித ஆய்வில் ஈடுபடுவது என் நோக்கம் அல்ல. நான் எடுத்துக் கொண்டுள்ள விஷயத்துக்கு—வசனநடை—சம்பந்தப்பட்ட சில அம்சங்களை மட்டுமே இங்கு எடுத்துச்சொல்ல விரும்புகிறேன்.