உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

பாரதிக்குப் பின்

நயங்கள் எனக் கருதுவதே பொருத்தமாக இருக்கும். புதுமைப்பித்தன் பின் வருவன போன்ற நயமான பிரயோகங்கள் பலவற்றையும் ஆண்டிருக்கிறார்:

‘வயது ஐம்பதுக்கு மேலாகியும் மார்க்கண்ட வாலிபம்—சிறிது அசுர மோஸ்தரில்!’

‘வாலிபத்தில் பெண்கள் என்றால் அர்ஜுன ரசனை’

‘ஸ்டோர் மானேஜர் கண்ணப்ப நாயனார் ரகத்தைக் சேர்ந்த பேர்வழி, தனது இஷ்ட தெய்வத்திற்குத் தான், ருசித்துப் பார்த்துத் தான் சமர்ப்பிப்பார்’—பெண்களை

உவமைகளையும் உருவகங்களையும் அதிசயிக்கத் தகுந்த விதத்தில் பதுமைப்பித்தன் படைத்திருக்கிறார்.

“வலுவற்றவனின் புத்திக்கு எட்டாது நிமிர்ந்து நிற்கும் சங்கரனுடைய சிந்தனைக்கோயில் போல் திடமற்றவர்களின் கால்களுக்குள் அடைபடாத கைலயங்கிரியைப் பனிச் சிகரங்களின் மேல் நின்று தரிசித்தார்கள்.

தமது துன்பச் சுமையான நம்பிக்கை வறட்சியை உருவகப்படுத்தின பாலையைத் தாண்டினார்கள்.

தம் உள்ளம் போலக் கொழுந்து விட்டுப் புகை மண்டிச் சாம்பலையும் புழுதியையும் கக்கும் எரிமலைகளை வலம் வந்து கடந்தார்கள்.

தமது மனம் போல ஓயாது அலைமோதிக் கொண்டு கிடக்கும் சமுத்திரத்தின் கரையை எட்டிப் பின்னிட்டுத் திரும்பினார்கள்.

தம் வாழ்வின் பாதை போன்ற மேடு பள்ளங்களைக் கடந்து வந்து விட்டார்கள்.”

(சாப விமோசனம்)