பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்வியும் ஆசிரியப் பணியும்

9

சுப்புரத்தினம் இலக்கண இலக்கியத்தில் ஆழ்ந்த புலமை பெற்றதோடு, நாடகத்திலும் நல்ல பயிற்சி பெற்றார். மார்கழித் திங்கள், மாசிமகம் திருவிழாக்களில் இசையோடு பாடும் பாடற்குழுக்களிலும் இடம் பெற்றுச் சிறந்த இசைப் பயிற்சியும் பெற்றார்.

திண்ணைப் பள்ளிக் கூடக் கல்வியை முடித்து உயர்கல்வி பெறுவதற்காகக் கல்வே கல்லூரிக்குச் சென்றார். கலவை சுப்பராயச் செட்டியார் என்பவரால் உருவாக்கப்பட்டது கல்வே கல்லூரி நிறுவனம். ஆங்கிலம், பிரஞ்சு, தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் பயிற்சி அளித்தது இக் கல்வி நிறுவனம்.

தமிழ் ஆசிரிய அலுவலுக்குரிய பட்டப் படிப்பைப் (Brevet de Langue Indigene) பயிலுவதற்காகக் கல்வே கல்லூரியில் நுழைந்தார் சுப்புரத்தினம். வகுப்பு மாணவர்களுள் சுப்புரத்தினம் சிறியவர்; படிப்பில் பெரியவர். அதனால் அரசாங்க உதவித் தொகையும் இவருக்குக் கிடைத்தது. தமிழ்ப் புலவர் தேர்வில் முப்பது பேருக்கு மேல் வெற்றி பெற்றனர். ஆனால் முதன்மையாக வெற்றி பெற்றவர் சுப்புரத்தினம்.

புதுவைக் கல்வி இயக்குநரின் செயலாளராக இருந்த திரு. கையார் என்பவர் கனகசபையின் நெருங்கிய நண்பர். அவர் சுப்பு ரத்தினத்தைக் கூப்பிட்டு, "சுப்பு! தமிழாசிரியர் வேலைக்கு ஒரே ஓர் இடம் தான் காலியிருக்கிறது, அதுவும் நிரவியில்தான். நியாயமாக அந்த இடம் உனக்குத்தான் கிடைக்கவேண்டும். காரணம் நீதான் முதன்மையாகத் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறாய். அதுவுமல்லாமல் நீ அரசாங்க உதவித் தொகை பெற்றுப் படித்தவன். சட்டப்படி அரசாங்க உதவித் தொகை பெற்றுப் படித்தவனுக்குத்தான் முதற் சலுகை. உன்னிடம் உள்ள ஒரே குறை நீ உருவத்தில் மிகச் சிறியவன் பொடியன். நீ நேர்முகத்தேர்வுக்கு வரும்போது இரண்டு மூன்று சட்டையணிந்து, அவைகளுக்கும் மேல் ஒரு கோட்டும் அணிந்து வரவேண்டும். உன்னை உயரமாகக்காட்டிக் கொள்ளக் குதியுயர்ந்த காலணி அணிந்து வா! கல்வி இயக்குநரிடம் தைரியமாகப் பேசு! நான் அருகில் தான் இருப்பேன்" என்று அறிவுரை கூறினார். கையார் சொன்னபடியே எல்லாம் நடந்தது. நேர்முகத் தேர்வு முடிந்து அன்று மாலையே, அலுவலில் சேர்வதற்குரிய ஆணையைக் கையார் கையோடு வாங்கி வந்து வீட்டில் கொடுத்தார்.