பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

பாரதிதாசன்

நிரவியில் ஆசிரியர் பணி ஏற்றுக் கொண்டபோது சுப்பு ரத்தினத்துக்குப் பதினெட்டு வயது முடிந்து சில திங்கள்கள் ஆகியிருந்தன. நிரவி பிரெஞ்சு ஆளுகைக்கு உட்பட்ட ஒரு சிற்றூர். உருவத்தில் சிறியவனாக இருந்த சுப்புரத்தினத்தை அவ்வூர் மக்கள் ஓர் ஆசிரியனாகவே பொருட்படுத்தமாட்டார்கள். பள்ளி முடிந்து செல்லும்போது "இதோ போறானே பொடிப்பய, இவந்தா நம்ப ஊர்ப்பள்ளி வாத்தியாராம்!" என்று இவர் காதில் விழும்படியாகவே பேசிக் கொண்டு செல்லுவார்களாம்.

நிரவி அப்போது நகரத்து நாகரிகம் பரவாத சிற்றூர். புதுவையிலிருந்து சுப்புரத்தினத்தைப் பார்க்க நண்பர்கள் யாராவது முழுக்கால் சட்டை அணிந்துவந்தால் ஊர்மக்கள் கூட்டம் கூடிக்கொண்டு வேடிக்கை பார்ப்பார்களாம்.

சுப்புரத்தினத்துக்குத் தமது தமிழ்ப் புலமையில் சிறுவனாக இருக்கும்போதே நம்பிக்கையும் உறுதியும் உண்டு. அவருக்குக் கல்வே கல்லூரியில் தமிழ் கற்பித்த பங்காரு பத்தர் சிறந்த தமிழாசிரியர். சுப்புரத்தினத்தின் தந்தையாரின் நண்பரான பு.அ. பெரியசாமிப் புலவர் தமிழ்க்கடல். அவருக்கு ஒப்பாக யாரையாவது சொல்ல வேண்டுமானால் தமிழகத்தில் அரசஞ் சண்முகனாரைச் சொல்லலாம். இத்தகைய பெரியோர்களிடம் தமிழ்கற்ற சுப்புரத்தினம் எப்போதும் எந்தப் புலவரிடமும் அஞ்சியதில்லை. பெரும் புலவர்களின் பகையைச் சில நேரங்களில் இவரே விரும்பித் தேடிக் கொள்வதும் உண்டு.

விசுவலிங்கம் பிள்ளை என்பவர் நிரவியில் ஒரு முக்கியப் புள்ளி. இவருடைய ஆசிரியர் இராமசாமிப் புலவர் என்பவர். இப்புலவருக்கு வயது எழுபது இருக்கும். ஒரு நாள் மாலை சுப்புரத்தினம் பள்ளியிலிருந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த போது குருவும் சீடரும் குறட்டுப்பலகையில் அமர்ந்து இலக்கியச் சர்ச்சையில் ஈடுபட்டிருந்தனர். இன்னும் சிலரும் உடனிருந்தனர்.

விசுவலிங்கம் பிள்ளை சுப்புரத்தினத்தைப் புலவருக்குக் காட்டி, 'இந்தப் பையன்தான் இங்கே தமிழ் வாத்தியார்' என்று சொன்னார். புலவர் சுப்புரத்தினத்தைக் கூப்பிட்டார். அவர் கூப்பிட்ட தோரணையே, சுப்புரத்தினத்துக்கு கர்ரென்று சினம் வரும்படிச் செய்தது. இருந்தாலும் அவருடைய முதுமைத் தோற்றத்துக்கு மதிப்புக் கொடுத்து அடக்கமாகக் குறட்டின் மீது அமர்ந்தார் சுப்புரத்தினம். புலவர்,