உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"தமிழின்பமே முல்லையின் குறிக்கோள். முல்லையில் சிறப்பாக நம் கவியரசரின் கவிதைகளும், அவர்களைப் பற்றிய கருத்துக்களும் முகிழ்த்து மலர்ந்து மணம்தரும். தமிழ் ஆக்கம் ஒன்றே முல்லையின் நோக்கம். அரசியற் சூழ்ச்சி சமயவாதம் இவற்றிற்கு இடமில்லை. இயன்றவரை தமிழைக் கையாளுவது. பொருட்செறிவும் கருத்து நயமும் இருப்பின் பிற சொற்களின் பகைமை இல்லை. எண்ணத்தில் கருத்தில் சொல்லில், செயலில் தமிழாட்சி நிலை பெறக் காண வேண்டும்" என்று முல்லையின் நோக்கமாகக் குறிக்கப்பட்டுள்ளது. ஆறு இதழ்கள் வெளிவந்தன. பாவேந்தரின் இதழ்க் கொள்கைக்கு மாறுபட்டு நடந்தமையால், பதிப்பாசிரியர் முத்தையாவுக்கும் இவருக்கும் ஆழமான கருத்து வேறுபாடு முளைத்துவிட்டது. முல்லை குறுகிய கால அளவிலேயே உதிர்ந்துவிட்டது. அண்ணா, திரு.வி.க., எம். தண்டபாணி தேசிகர், சுப. நாராயணன், புதுமைப் பித்தன், பேராசிரியர் க. அன்பழகன், மு. அண்ணாமலை ஆகியோரின் படைப்புக்கள் முல்லையில் சிறப்பாக வெளியிடப்பட்டன.

குயில் திங்களிதழ் - 1947

பாவேந்தருக்கு வழங்கிய நிதியிலிருந்து உருபா 2000 குயில் என்னும் கவிதை ஏடு நடத்த ஒதுக்கப்பட்டது. டி.என். இராமனும் இவரும் சேர்ந்து நடத்த ஏற்பாடு. பாரதிதாசனை ஆசிரியராகக் கொண்டு 'குயில்' என்னும் கவிதை ஏடு வெளிவரும் என்று நாளிதழ்களில் விளம்பரப் படுத்தப்பட்டன. சென்னையிலிருந்து முதல் குயில் இதழ் வெளிவந்தது. அவ்விதழின் உரிமயைாளர் டி.என். இராமன் என்றும், பாரதிதாசனுக்கு திங்கள் தோறும் ரூ.200 ஆசிரியர் பணிக்கு ஊதியமாக வழங்கப்படும் என்றும் அவ்விதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. உடனே பாரதிதாசன், "அந்தக் குயிலுக்கும் எனக்கும் யாதொரு தொடர்பும் இலலை, விற்பனையாளரிடம் வாங்கிய முன் பணத்திற்கு நான் பொறுப்பாளி அல்லேன் இனிநான் என் வாயிலாக வெளியிட இருக்கும் குயிலுக்கு ஆதரவுதருக" என்று நாளிதழ் அறிக்கை வெளியிட்டார். குயில் இதழின் உரிமை யாருக்கு என்ற வழக்கு நீதிமன்றம் சென்றது. டி.என். இராமன் வழக்கைக் கைவிட்டு விடுவதாகக் கூறினார். பாரதிதாசன் குயில் திங்களிதழ் புதுவையிலிருந்து வெளிவந்தது. இதற்குத் தடை விதிக்கப்பட்ட காரணத்தால் 01.10.1948இல் நிறுத்தப்பட்டது.